23-வது வார்டில் ராஜன் பர்ணபாஸ் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் தனக்கு சீட் கிடைக்காததால் தனியாக களம் இறங்கினார்.
சென்னை மாநகராட்சி புழல் காவாங்கரை பகுதிக்குட்பட்ட 23-வது வார்டு தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த கட்சி சார்பில் ஷேக் முகமது அலி தி.மு.க. சின்னமான உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அ.தி.மு.க. சார்பில் சுந்தர் களம் இறங்கினார்.
இவர்களுக்கு எதிராக 23-வது வார்டில் ராஜன் பர்ணபாஸ் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் தனக்கு சீட் கிடைக்காததால் தனியாக களம் இறங்கினார்.
அவருக்கு தீப்பெட்டி சின்னம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த சின்னத்துக்கு ஆதரவாக 23-வது வார்டு முழுவதும் ராஜன் பர்ணபாஸ் தனது ஆதரவாளர்களுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்த வார்டில் அவர் வெற்றிபெற்றுள்ளார். 3,953 வாக்குகளை அவர் வாங்கி இருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர் சுந்தர் 2,369 வாக்குகள் கிடைத்துள்ளன. தி.மு.க. வேட்பாளராக களம்கண்ட ஷேக் முகமது அலிக்கு 2,271 வாக்குகளை மட்டுமே பெற்று 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்த வார்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மாதவரம் 3-வது மண்டலத்தில் இடம்பெற்றுள்ளது.
ராஜனின் தந்தை பர்ணபாஸ் புழல் பகுதியில் பிரபலமானவர் ஆவார். காங்கிரசை சேர்ந்த அவர் அந்த பகுதியில் நீண்ட நாட்களாக பல்வேறு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.
இதையடுத்து அவரது மனைவி வதனா பர்னபாசும் காங்கிரஸ் பிரமுகராக இருந்தவர் தான். இவர்களது வாரிசாக தன்னை முன்னிலை படுத்தி தேர்தல் களம் கண்ட ராஜன் பர்ணபாஸ் தி.மு.க., அ.தி.மு.க. வினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தீப்பெட்டி சின்னத்தில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.