கொலை செய்து கூரையில் தொங்க விடுவதாக மிரட்டிய வர்த்தகருக்கு …

212 0

கொலை செய்து சடலத்தைக் கூரையில் தொங்க விடுவதாக மிரட்டல் விடுத்த வர்த்தகர் ஒருவருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கீதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை ஊருகஸ்மங்ஹந்திய பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும், குறித்த சந்தேகநபரை மன்னிப்பதாகக் கூறி தனது பொலிஸ் முறைப்பாட்டை கீதா திரும்ப பெற்றுக் கொண்டுள்ளார் என தெரியவருகிறது.

எல்பிட்டிய கொட்டகனத்தே என்னும் பகுதியைச் சேர்ந்த 60 வயதான வர்த்தகர் ஒருவரே, கீதாவின் வீட்டுக்குள் புகுந்து இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கடன் தொகை ஒன்றை மீளச் செலுத்தத் தவறியதனால் கீதா மீது கடும் கோபம் கொண்டு குறித்த வர்த்தகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

எனினும் குறித்த கடன் தொகையைத் தாம் பெற்றுக்கொள்ளவில்லை எனவும், வறிய மக்களுக்கு வழங்கியதாகவும் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விளக்கத்திற்குச் செவி மடுக்காது கீதாவிற்குக் குறித்த வர்த்தகர் கொலை மிரட்டல் விடுத்த காரணத்தினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடன் தொகை ஒன்றைக் கேட்டு வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுக்கும் காட்சிகள் சிசிடிவி காணொளிகளில் பதிவாகியுள்ளதாக கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், வர்த்தகரின் மனைவியும், மகளும் வந்து கோரியதனால் வர்த்தகருக்கு எதிரான முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக்கொண்டு அவரை மன்னித்து விட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.