திருக்கேதீஸ்வரம் – மாதா சுரூப விடயத்தில் ஞானசார தேரர் தலையிடுவதை தவிர்க்க மன்னார் ஆயர் உட்பட கத்தோலிக்க சமயத் தலைவர்களும் , இந்து மதத் தலைவர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமய நல்லிணக்கத்தை உறுதி செய்தல் வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள மாதா சுரூப விடயம் தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வடகிழக்கில் குறிப்பாக மன்னார் பிரதேசத்தில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுகுமிடையே சமய முறுகல் நீண்ட காலமாக தொடர்ந்து வரும் நிலையில் தற்போது திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள மாதா சுரூப பிரச்சினை தொடர்பாக ஒரே நாடு ஒரே சட்ட செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தலையிடுவதை தவிர்க்க மன்னார் ஆயர் உட்பட கத்தோலிக்க சமயத் தலைவர்களும் , இந்து மதத் தலைவர்களும் பேச்சுவார்த்தை ஈடுபட்டு சமய நல்லிணக்கத்தை உறுதி செய்தல் வேண்டும்.
இந்த நாட்டில் பௌத்த மற்றும் இந்து மக்களே பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். அரச சார்பற்ற அமைப்புக்கள் அறிக்கை தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். இது திட்டமிட்ட அரசியல் செயல் என குற்றச் சாட்டை முன்வைப்பதன் மூலம் கிறிஸ்தவத்திற்கும் ஏனைய சமயங்களுக்கும் இடையில் முரண்பாட்டை வலியுறுத்துவதோடு திருக்கேதீச்சர சமயப் பிரச்சினையை தான் தீர்க்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மடு தேவாலயம் காணிப்பிரச்சினை ஒன்றில் இந்து மக்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதையும் நாம் அறிவோம்.
பௌத்த துறவிகளையும் ,பௌத்தர்களையும் அதிகமாகக் கொண்ட தொல்பொருளியலாளர்கள் வடகிழக்கில் இந்துக்களின் பூர்வீக வழிபாட்டு தலங்களை ஆக்கிரமித்து சிங்கள பௌத்த மயமாக்குவதை எதிர்க்காதவர், வடகிழக்கில் யுத்தக் காலத்தில் சமயத் தளங்கள் மீது போடப்பட்ட குண்டுகளால் சேதமடைந்த வணக்க தலங்கள் தொடர்பிலும், அங்கு கொல்லப்பட்டவர்கள் விடயத்திலும் வருத்தம் தெரிவித்து நீதியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்காதவர் மன்னார் திருக்கேதீஸ்வர சுரூப விடயத்தில் இந்துக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க போகிறேன் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட கபட செயலாகும்.
அரசியல் ரீதியாக தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகின்ற காலகட்டத்தில் தமிழர் தாயகத்தில் அக பிரச்சினையை தீர்க்க வெளி சக்திகள் அதுவும் ஞானசார தேரர் போன்ற சமய மற்றும் இன துவேஷம் கொண்டவர்கள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது . அத்தோடு சமய பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக்கவும் இடமளிப்பது தமிழர்களின் எதிர்காலத்தை பாதிப்பதாகவும் அமைந்துவிடும்.
ஆதலால் தேசிய பிரச்சினைக்கு நீதியை தேடும் வடகிழக்கு ஆயர்கள் சமய உட்பூசல்களுக்கு இடமளிக்காது காலத்திற்கு காலம் தோன்றும் உள்ளக சமய பிரச்சனைகளை தீர்த்திட அடிமட்டத்திலும், மேல்மட்டத்திலும் கலந்துரையாடல்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான சூழ்நிலை இன்மை காரணமாகவே வெளிச் சக்திகள் உள்நுளைய முயற்சிக்கின்றன. இதனை தவிர்க்கவும், சமய நல்லிணக்கத்தை உருவாக்கி தாயக அரசியல் மீட்புக்காக ஒன்றுபட்ட சக்தியாக செயல்படவும் வடகிழக்கு சமயத் தலைவர்களின் அவசர சந்திப்புக்களை மேற்கொண்டு சமய உறவையும் நல்லிணக்கத்தையும் உருவாக்கிட அவசரமாக செயல்படல் வேண்டும் என மேலும் தெரிவித்தார்.