முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதுடன் 13 பேர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் கைதானவர்களை இன்று (21) ஆஜர்படுத்திய போது தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழில் இருந்து வருகை தந்தவர்களின் மினிபஸ் சான்று பொருளாக நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதுடன், ஜூன் 23ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்பாணத்தில் இருந்து அளம்பில் சென்றவர்களுக்கும் அளம்பில் பிரதேசத்தினை சேர்ந்தவர்களுக்கும் நேற்று (20) மாலை ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறியுள்ளது.
தாக்குதலின் போது யாழில் இருந்து சென்ற இருவரும் அளம்பில் பகுதியினை சேர்ந்த 18, 37 மற்றும் 45 வயதுகளையுடைய மூவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து யாழிலிருந்து மினி பஸ்ஸில் சென்ற 12 பேர் அளம்பில் பகுதியினை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 13 பேர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.