ஒமைக்ரான் வடிவில் தமிழகத்தில் கொரோனா 3-வது அலை டிசம்பர் இறுதியில் தொடங்கியது. கடந்த மாதம் அது உச்சத்தை தொட்டு தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது.
கொரோனா வைரஸ் மரபணு உருமாற்றம் பெற்று புதுவடிவங்களில் பரவி வருவதால் அது நீண்ட கால தலைவலியாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர்.
அதை உறுதிபடுத்துவது போல கொரோனா வைரஸ் காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று புதிய வடிவங்களில் பரவி மக்களை படாதபாடு படுத்தியது. இந்தநிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொரோனாவின் புதிய வடிவமாக ஒமைக்ரான் உருவானது.
ஒமைக்ரான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் ஒமைக்ரான் 4 வகைகளில் மாற்றம் எடுத்தது. அதில் பிஏ-1 என்ற வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவியது.
ஜலதோஷம், காய்ச்சல், உடல்வலி ஆகிய அறிகுறிகளுடன் பரவிய ஒமைக்ரான் அதிக அளவில் மக்களை பாதிக்கும் என்று நிபுணர்கள் கருதினார்கள். ஆனால் ஒமைக்ரான் லட்சக்கணக்கான மக்களிடம் பரவினாலும் அதிர்ஷ்டவசமாக அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
முதல் 2 அலைகளுடன் ஒப்பிடுகையில், 3-வது அலையான ஒமைக்ரான் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வந்த வேகத்தில் குறைந்தது.
இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முதலாக ஒமைக்ரான் வைரஸ் காலடி எடுத்து வைத்தது. டிசம்பர் 31-ந் தேதி ஒமைக்ரான் வைரசின் தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்தது. அதன் பிறகு அதன் வேகம் அதிகரித்தது.
ஜனவரி மாதம் முதல் வாரம் ஒமைக்ரான் அதிகரிக்கும் வேகம் காட்டுத்தீ போல இருந்தது. 2-வது வாரத்தில் அதன் அதிகரிப்பு அச்சுறுத்தும் வகையில் மாறியது. 3-வது வாரம் ஒமைக்ரான் இந்தியாவில் உச்சத்தை தொட்டது.
தமிழகத்திலும் ஒமைக்ரான் பாதிப்பு ஜனவரியில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது. ஜனவரி மாதம் 22-ந் தேதி 30 ஆயிரத்து 744 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டனர். அதுதான் தமிழகத்தில் 3-ம் அலையின் தினசரி பாதிப்பில் உச்சமாக கருதப்பட்டது.
அந்த சமயத்தில் சுமார் 2 லட்சம் பேர் ஒமைக்ரான் பாதிப்பால் சிகிச்சையில் இருந்தனர். ஜனவரி 26-ந் தேதி சிகிச்சையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 692 ஆக இருந்தது. ஜனவரி 27-ந் தேதி ஒரே நாளில் 53 பேர் பலியானார்கள். இதுதான் ஒமைக்ரான் 3-வது அலையின் அதிகபட்ச உயிரிழப்பாக பதிவானது.
ஜனவரி கடைசி வாரத்திற்கு பிறகு தமிழகத்தில் ஒமைக்ரான் சரிவை சந்திக்கத் தொடங்கியது. டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ், ஓரிரு வாரங்களில் தீவிரம் அடைந்து ஜனவரியில் பேரிடராக உருமாறியது.
ஜனவரி இறுதி வாரத்திற்கு பிறகு அதன் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அதிகரித்த வேகத்தை விட மிக வேகமாக குறைந்தது. பிப்ரவரி முதல் வாரம் நம்பிக்கை தரும் வகையில் ஒமைக்ரான் பரவல் வீழ்ச்சி அடைந்தது. தற்போது ஒமைக்ரான் தமிழகத்தில் அடக்கப்பட்டு இருக்கிறது.
50 நாட்களில் ஒமைக்ரான் தமிழகத்தில் முடிவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று தமிழகத்தில் 949 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இது கடந்த 50 நாட்களில் இல்லாத மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் நேற்று முதல் தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து இருக்கிறது.
சென்னையில் 223 பேர், கோவையில் 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 36 மாவட்டங்களிலும் ஒமைக்ரான் வரலாறு காணாத அளவுக்கு குறைந்து விட்டது.
குறிப்பாக புதுக்கோட்டை, விருதுநகர், கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை, திண்டுக்கல், மயிலாடுதுறை, தேனி, அரியலூர், பெரம்பலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் ஒமைக்ரான் பாதிப்பு காணப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்ப வர்களின் எண்ணிக்கையும் 15ஆயிரத்து 938 என்ற அளவுக்கு கணிசமாக குறைந்து விட்டது. தினசரி பாதிப்பு விகிதம் 1.3 சதவீதம் அளவுக்கு குறைந்து இருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் 3-வது அலை வெற்றிகரமாக முடக்கப்பட்டு இருக்கிறது.
ஒமைக்ரானின் சாதாரண பாதிப்பும், தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், முககவசம் அணிவதும் 3-வது அலையை விரைவில் முடக்கியதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். எதிர்பார்த்ததை விட கொரோனா 3-வது அலை தமிழகத்தில் முடிவுக்கு வந்து இருப்பதால், மக்கள் நல்வாழ்வுத்துறையினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
என்றாலும் மருத்துவ பரிசோதனையையும், கண்காணிப்பையும் குறைக்கப்போவது இல்லை என்று அறிவித்துள்ளனர். தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் முககவசம், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை கடைபிடிப்பதை மக்கள் தவிர்க்கக்கூடாது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ், தமிழகத்தில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந் தேதி காலடி எடுத்து வைத்தது. மார்ச் 25-ந்தேதி கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டது.
மே 31-ந் தேதி தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது. ஜூலை மாத இறுதியில் முதல் அலையின் உச்சம் எட்டப்பட்டது.
ஆகஸ்டு மாதத்தில் அதன் வேகம் அதிகமாக இருந்தது. டிசம்பரில் கொரோனா முதல் அலை குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்தது. டிசம்பர் 29-ந் தேதி தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. மே மாதம் தினசரி பாதிப்பு உச்சத்தை தொட்டது. மே 21-ந் தேதி 36 ஆயிரத்து 184 பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். மே 30-ந் தேதி ஒரே நாளில் 493 பேர் பலியானார்கள்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையில் டெல்டாவும், டெல்டா பிளஸ்சும் சேர்ந்து மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியது. ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. ஜூன், ஜூலை மாதங்களிலும் பாதிப்பு கணிசமாக இருந்தது.
அக்டோபர் மாதத்திற்கு பிறகுதான் கொரோனா 2-வது அலையின் ஆட்டம் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. நவம்பர் மாதம் கொரோனா 2-வது அலை அடங்கியது. நவம்பர் 1-ந் தேதி தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் வந்ததால் 2-வது அலை முடிவுக்கு வந்தது.
இந்தநிலையில் ஒமைக்ரான் வடிவில் தமிழகத்தில் கொரோனா 3-வது அலை டிசம்பர் இறுதியில் தொடங்கியது. கடந்த மாதம் அது உச்சத்தை தொட்டு தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று 3-வது அலையும் முதல்முதலாக தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது.
2020-ம் ஆண்டு கொரோனா முதல் அலை தமிழகத்தில் ஏற்பட்டபோது அந்த அலை ஓய்வதற்கு 9 மாதங்கள் தேவைப்பட்டது. அதுபோல கொரோனா 2-வது அலை 2021-ம் ஆண்டு தமிழகத்தில் மையம் கொண்டபோது அது வீழ்ச்சி அடைவதற்கு 8 மாதங்கள் எடுத்துக் கொண்டது.
ஆனால் கொரோனா 3-வது அலை இந்த ஆண்டு தொடக்கத்தில் உருவான நிலையில் அது மார்ச், ஏப்ரல் வரை இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் தமிழகத்தில் 50 நாட்களுக்குள் அது அடக்கப்பட்டு இருக்கிறது.