தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதால் பாலியல் ரீதியிலான சிக்கல் ஏற்படாது – விசேட வைத்திய நிபுணர் பிரியங்கர ஜயவர்தன

248 0

கொவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கு மிகக்குறைந்தளவில் பாலியல் ரீதியிலான சில பிரச்சினைகள் ஏற்படக் கூடும். ஆனால் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதால் அவ்வாறு சிக்கலும் ஏற்படாது.

எனவே இதுகுறித்து வீண் அச்சம் கொள்ளாமல் சகலரும் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விசேட வைத்திய நிபுணர் பிரியங்கர ஜயவர்தன தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலகலாவிய ரீதியில் சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இலங்கையில் பெரும்பாலானோர் அச்சப்படுவதைப் போன்று பாரதூரமான பக்க விளைவுகள் காணப்பட்டால் அவ்வாறு ஒரு பில்லியன் பேருக்கு தடுப்பூசி வழங்கியிருக்க முடியாது.

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு முன்னர் 2019 வரையான காலப்பகுதியில் நாளாந்தம் இதய நோயால் பாதிக்கப்பட்ட 450 பேர் உயிரிழக்கின்றனர். அதேபோன்று மூளை நோயால் பாதிக்கப்பட்ட 100 – 150 பேர் உயிரிழக்கின்றனர்.

எவ்வாறிருப்பினும் இதயம் மற்றும் மூளை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை விட பன்மடங்கு அதிகமானோர் குணமடைகின்றனர்.

எனவே கொவிட் தடுப்பூசி ஏற்றப்படுவதால் இந்த நிலைமை ஏற்படுகிறது என்று எண்ணுவதை தவிர்க்க வேண்டும். மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஏற்படக் கூடிய சிறியளவிலான பக்க விளைவுகள் வழமையானவையாகும். எனினும் அவை எளிதில் குணமடையக் கூடியவையாகும்.

ஆனால் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமல் கொவிட் தொற்றுக்கு உள்ளாகுபவர்களுக்கு நீண்ட கால பக்க விளைவுகள் ஏற்படும். கொவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கு மிகக்குறைந்தளவில் பாலியல் ரீதியிலான சில பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.

ஆனால் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதால் அவ்வாறு சிக்கலும் ஏற்படாது. தடுப்பூசியால் இது போன்ற சிக்கல்கள் ஏற்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் அதனை வழங்கியிருக்காது.

முதியவர்களுடன் ஒப்பிடும் போது சிறுவர்களுக்கு தொற்று அறிகுறிகள் தென்படுவது மிகக் குறைவாகும். எவ்வாறிருப்பினும் அறிகுறிகள் தென்படுவது பூச்சிய நிலை என்று கூற முடியாது. அத்தோடு கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் இளைஞர்களுக்கே நீண்ட கால பின் விளைவுகள் ஏற்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது

எனவே குறிப்பிட்ட வயதெல்லைக்கு மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும் என்றார்.