யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தை முடக்கும் முயற்சிக்கு எதிராக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வெற்றியை பெற்றுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை மூடி இன்றைய தினம் மாணவர்கள் பாரிய முடக்கல் போராட்டமொன்றை இன்று காலை முன்னெடுத்திருந்தனர்.
கடந்த பல மாதங்களாக செயலிழந்து கிடக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை அங்கீகரிக்குமாறு கோரியே மாணவர்களது போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் அரசினதும் இராணுவ தரப்பினதும் தலையீட்டின் மத்தியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மாணவர் ஒன்றியத்தை செயற்படவிடாது தடுத்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக மாணவ தலைவர்களிற்கும் துணைவேந்தருக்குமிடையே நடத்தப்பட்ட சந்திப்பின் அடிப்படையில் போராட்டம் பின்னர் விலக்கி வைக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக மாணவ ஒன்றிய புதிய நிர்வாக தெரிவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் அனுமதியளித்துள்ளார்.
கடந்த ஆண்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டதையடுத்து முன்னெடுக்கப்பட்ட மாணவர் போராட்டங்களையடுத்து தூபி மீள அமைக்கப்பட்டிருந்தது.
எனினும் மாணவர் ஒன்றியத்தை முடக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.