ஒரு வயது குழந்தை ரூ.2½ லட்சத்துக்கு விற்பனை- தாய் உள்பட 10 பேர் கைது

258 0

2-வது திருமணத்திற்காக பெற்ற குழந்தையை விற்ற கொடூர தாய் கைது செய்யப்பட்டிருப்பது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் கே.செவல் பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 28). இவர்களது ஒரு வயது பெண் குழந்தை ஹாசிணி.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முருகன் இறந்து விட்டார். அதன் பிறகு கலைச்செல்வி தனது தந்தை கருப்பசாமி வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு 2-வது திருமணம் செய்ய பெற்றோர் மற்றும் உறவினர்கள் திட்டமிட்டனர்.

இதற்காக வரன் பார்த்தனர். அப்போது கலைச்செல்விக்கு குழந்தை இருப்பது தெரிந்து பலரும் பின் வாங்கினர். இதனால் அந்த குழந்தையை விற்று விட குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதற்காக சிவகாசியை சேர்ந்த திருமண புரோக்கர் கார்த்தி என்பவரை தொடர்பு கொண்டனர்.

அவர் குழந்தையை விற்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதுபற்றி தனக்கு தெரிந்த தேவேந்திரன், நந்தகுமார் ஆகியோரிடம் தெரிவித்தார். ஆன்லைன் மூலம் குழந்தையை விற்பது தொடர்பாக நந்தகுமார் பலரிடம் பேசி உள்ளார்.

மதுரையை சேர்ந்த செண்பகராஜன், மகேஸ்வரி என்ற உமா, மாரியம்மாள் ஆகியோரிடம் பெண் குழந்தை குறித்து நந்தகுமார் தெரிவித்துள்ளார். அவர்கள் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த வடை வியாபாரி கருப்பசாமி- பிரியா தம்பதியினருக்கு குழந்தை இல்லை என்றும், அவர்களிடம் குழந்தையை விற்றுவிடலாம் என்றும் கூறினர்.

இதனை தொடர்ந்து கருப்பசாமி-பிரியா தம்பதியிடம் குழந்தையை பற்றி தெரிவிக்கப்பட்டது. குழந்தையை உங்களுக்கு தர ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வேண்டும் என பேரம் பேசினர். அவர்கள் பணத்தை கொடுத்ததும் குழந்தையை விற்றுவிட்டனர்.

இதற்கிடையில் குழந்தை விற்பனை குறித்து கூரைகுண்டு கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் விசாரணை நடத்தியதில் குழந்தை விற்பனை நடந்து இருப்பது உறுதியானது.

இதுகுறித்து சூலக்கரை போலீசில் கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமி புகார் செய்தார். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் துணை சூப்பிரண்டு அர்ச்சனா மேற்பார்வையில் சூலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் அதிரடி விசாரணை நடத்தியதில் குழந்தையை விற்று தாய் கலைச்செல்வி மற்றும் அவரது தந்தை கருப்பசாமிக்கு ரூ.80 ஆயிரம் கொடுத்திருப்பது தெரியவந்தது. மீதி பணத்தை மற்ற 8 பேரும் பங்கு போட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து கலைச்செல்வி உள்பட 10 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கலைச்செல்வி, கருப்பசாமி, கார்த்தி, தேவேந்திரன், நந்தகுமார், செண்பகராஜன், மகேஸ்வரி என்ற உமா, மாரியம்மாள் மற்றும் குழந்தையை வாங்கிய வடை வியாபாரி கருப்பசாமி, அவரது மனைவி பிரியா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைதான கார்த்தி, நந்தகுமார் ஆகியோர் இதுபோன்று குழந்தையை விற்பதில் குழுவாக செயல்பட்டு வருவது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் இதுபோல வேறு குழந்தைகளை விற்று உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2-வது திருமணத்திற்காக பெற்ற குழந்தையை விற்ற கொடூர தாய் கைது செய்யப்பட்டிருப்பது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.