இஸ்லாமாபாத்தில் உள்ள மொஹ்சின் பெய்க் வீட்டில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.
தமது அமைச்சரவையில் உள்ள 10 அமைச்சர்களுக்கு சிறந்த செயல்திறன் சான்றிதழை வழங்க பிரதமர் இம்ரான் கான் முடிவு செய்துள்ளார்.
இது குறித்த தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளர் மொஹ்சின் பெய்க், பிரதமர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியதாக தெரிகிறது.
மேலும் பாகிஸ்தான் தகவல் தொடர்பு மற்றும் அஞ்சல் சேவைகள்துறை அமைச்சர் முராத் சயீத் குறித்தும் பாலியல் ரீதியாக அவர் தரக் குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
ஒரு வாரத்திற்குப் பிறகு, இது குறித்து அமைச்சர் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு, இஸ்லாமாபாத்தில் உள்ள பெய்க் வீட்டில் நேற்று சோதனை நடத்தியது. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டு மற்றும் எந்த தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு என்பது வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் கைது நடவடிக்கையின்போது அதிகாரிகளை நோக்கி பத்திரிக்கையாளர் பெய்க் தமது மகனுடன் சேர்ந்து துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இதில் ஒருவர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைதுக்கு பின்னர் விசாரணைக்காக மார்கல்லா காவல்நிலையத்திற்கு பெய்க் மாற்றப்பட்டார். வன்முறை வழிகளைப் பயன்படுத்தியதாகக் கூறி அவர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ கண்டனம் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் விமர்சனங்களுக்கு பயப்படுகிறார் என்பதை இது காட்டுகிறது என்றும், பத்திரிகையாளர் பெய்க்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.