நாட்டில் ஊழல் மோசடி மிதமிஞ்சியுள்ளது. தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரைவார்க்கும் கொள்கையில் இருந்துக்கொண்டு அரசாங்கம் அரச நிர்வாகத்தை முன்னெடுக்கிறது.
இனிவரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் சுதந்திர கட்சி தனித்தே போட்டியிடும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல்வேறு சிறந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் பங்காளிக்கட்சியாக ஒன்றினைந்தோம். கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட பல விடயங்களை அரசாங்கம் செயற்படுத்தவில்லை.
நாட்டில் ஊழல்மோசடி மிதமிஞ்சியுள்ளது. நாட்டின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் அழுத்தம் எல்லை கடந்துள்ளதை பல்வேறு சம்பவங்கள் ஊடாக விளங்கிக்கொள்ள முடிகிறது.
தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரைவார்க்கும் கொள்கையில் இருந்துக்கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. கந்தளை சீனி தொழிற்சாலையில் 85 சதவீத பங்குகளை சிங்கப்பூர் நாட்டு நிறுவனத்திற்கு வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
மறுபுறம் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கும், யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்திற்கும் எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் தேசிய வளங்களில் வெளிநாடுகள் ஆதிக்கம் செலுத்துவதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்தள்ளமை முற்றிலும் தவறானது. சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்திற்கு முரணாக அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுகின்றன.
இனிவரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்தே போட்டியிடும் என்பதை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளோம்.தேர்தலை எதிர்பார்த்துள்ளோம் என்றார்.