ஐ.நா வில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை நிறைவேற்ற முயற்சி -ருவான் விஜேவர்தன

197 0

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான வாய்ப்பினை இலகுபடுத்திக் கொடுக்கும் வகையில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிரான செயற்பாடுகள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியமாகும். நாடு ஜனநாயகமானதாக இருந்தால் மாத்திரமே முதலீடுகள் கிடைக்கப் பெறும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத அரசாங்கம் தற்போது எதிர்க்கட்சிகளை நசுக்க முயல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு இருண்ட யுகத்தின் முன்னறிவிப்புகள் உருவாகி வருகின்றன. ஊடகவியலாளர் சமுதித வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சு தாக்குதல் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் நாலக கைது செய்யப்பட்டமை என்பவற்றின் ஊடாக இது தெளிவாகிறது.

நாடு நாளுக்கு நாள் அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் திறமையின்மையை அம்பலப்படுத்துபவர்களை அச்சுறுத்தும் இழிவான வேலைத்திட்டம் தற்போது செயற்படுத்தப்பட்டு வருவது தெளிவாகின்றது.

முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தமது நிலைப்பாடுகளை பதிவிடுபவர்கள் குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்படுகின்றனர். கவிதை நூலை எழுதிய இளைஞர் சுமார் ஒரு வருட காலம் குற்ற விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு தான் அரசாங்கம் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கின்றதா? அரசியலமைப்பில் நாட்டு மக்களின் கருத்து சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் தற்போது கருத்து சுதந்திரம் காணப்படுகிறதா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஊடகவியலாளர் சமுதிதவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஊடகவியலாளர்களுக்கே சுதந்திரமாக கருத்து தெரிவிக்கும் சூழல் இல்லை என்றால் , சாதாரண மக்களின் நிலைமை என்ன? துப்பாக்கிகளுடன் வருகை தந்து கல் வீச்சு தாக்குலை மேற்கொண்டு, வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு சுதந்திரமாக தப்பிச் செல்கிறார்கள் என்றால் நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.

2015 க்கு முன்னர் இதேபோன்ற நிலைமையே காணப்பட்டது. சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டார். ஊடகவியலாளர் பொத்தல ஜயந்த கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். திவயின பத்திரிகையின் ஆசிரியர் உபாலி தென்னகோன், கீத் நொயார் போன்றோர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. சியத தொலைகாட்சி நிறுவனத்திற்கு தீ வைக்கப்பட்டது. அந்த இருண்ட காலத்தின் நிழல்கள் இப்போது ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளில் அல்லது ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரச்சினைகள் காணப்படுமாயின் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அவதூறு சட்டம் காணப்படுகிறது. அதனை விடுத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகிறது என்றால் நாட்டில் மிக மோசமான சட்டம் நடைமுறையில் இருக்கின்றதே தவிர ஜனநாயகம் அல்ல.

ஊடக நிறுவனங்களால் அதிகளவில் விமர்சனங்களுக்கு உள்ளாவது ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே. எனினும் நாம் அவ்வாறான ஊடக நிறுவனங்களுக்கு எதிராகவோ , ஊடகவியலாளர்களுக்கு எதிராகவோ எவ்வித தாக்குதல்களையும் முன்னெடுக்கவில்லை. நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஊடக சுதந்திரத்திற்காக முன்னின்று செயற்பட்டுள்ளோம். 2002 இல் அதுவரையில் ஊடகவியலாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கிய குற்றவியல் அவதூறு சட்டத்தினை இரத்து செய்தோம். 2015 இல் நாம் ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் ஊடக சுதந்திரம் மற்றும் மக்களின் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தினோம்.

அன்று நல்லாட்சி அரசங்கத்தின் மீதே சமூக வலைத்தளங்களில் அதிகளவான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் நாம் பொலிஸாரைப் போன்று ஊடகவியலாளர்களை துன்புறுத்தவில்லை. தற்போது புதிய நடைமுறை யாதெனில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிடுபவர்களையும் , ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்துபவர்களையும் கைது செய்வதாகும். சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக பாதாள உலகக்குழுவிலிருந்து வந்ததைப் போன்று கைது செய்யப்பட்டார்.

அவர் தவறிழைத்திருந்தால் பொலிஸார் போன்று வந்து கைது செய்யாமல் எதற்காக பாதாள உலக உறுப்பினர்கள் போல் வந்து கைது செய்தனர்? மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்குவதே இதன் உள்நோக்கமாகும் என்று தெளிவாகிறது. இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருந்தால் ஜனநாயத்தை குழி தோண்டி புதைக்கும் நாடாகவே இலங்கையை சர்வதேசம் பார்க்கும்.

அடுத்த மாதம் மீண்டும் ஐக்கிய நாடுகள் சபையில் நிலைப்பாட்டினை தெரிவிக்க வேண்டியுள்ளது. இதன் போது இந்த பிரச்சினை எழும். இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கு அவர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த அரசாங்கம் அதற்கு எதிரானவர்களை துன்புறுத்தி அவர்களுக்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதன் பின்னர் மனித உரிமை பேரவைக்குள் இலங்கைக்கு எதிராக குரல் எழுப்பப்படும்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இலங்கை ஜனநாயக நாடு இல்லை என்று காண்பித்தால் வெளிநாடுகள் எமக்கு எவ்வாறு உதவ முன்வரும்? இலங்கைக்கு முதலீடுகள் கிடைக்கப்பெறுமா? நாட்டிலுள்ள பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமெனில் சர்வதேசத்தின் உதவி எமக்கு அவசியமாகும். சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதால் மாத்திரம் டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியமாகும். நாடு ஜனநாயகமானதாக இருந்தால் மாத்திரமே முதலீடுகள் கிடைக்கப் பெறும். அதே போன்று வெளிநாடுகளிலிருந்து நிவாரண உதவிகளும் கிடைக்கப் பெற மாட்டாது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத அரசாங்கம் தற்போது எதிர்க்கட்சிகளை நசுக்க முயல்கிறது.

பெரும்பாலான மக்கள் அரசாங்கத்தை வெறுத்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்தும் முன்னோக்கி பயணிக்க முடியாது. சமூக நெருக்கடிகளை எதிர்கொண்டு முன்வருபவர்களை குண்டர் பலத்தால் ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. கருத்து சுதந்திரத்திற்காக ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் முன்னின்று செயற்படும்.

மேலும் பல சமூக செயற்பாட்டாளர்களை குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு மக்களை அச்சுறுத்துவதற்கு இடமளிக்க முடியாது.

அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை இல்லாமலாக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். கருத்த சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக ஐ.தே.க. தலைவர் உள்ளிட்ட ஐ.தே.க. உறுப்பினர்கள் அனைவரும் முன்னின்று செயற்படுவர் என்றார்.