2022 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேஷ் தீக்ஷனவை வாங்கிய பின்னர், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனவுக்கு எதிராக சமூக ஊடக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தீக்ஷன ஐபிஎல் ஏலத்தின் 2ம் நாளில் 70 லட்சம் இந்திய ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதற்கு ரசிகர்கள் சமூக ஊடகங்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
அத்துடன், சென்னை அணியை புறக்கணிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
வைரலாகும் ஜெயலலிதாவின் கோரிக்கை கடிதம்
கடந்த 2013ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தமிழகத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விளையாட தடை விதிக்க வேண்டும் என அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்க்கு கடிதம் எழுதி இருந்தார்.
அந்த கடித்ததில் அவர், இலங்கை விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி நடுவர்கள், அதிகாரிகள் என இலங்கையை சேர்ந்த யாரும் பங்கேற்க மாட்டார்கள் என ஐபிஎல் நிர்வாகம் உறுதியளித்தால் மட்டுமே சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிப்போம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது ஜெயலலிதாவின் கோரிக்கை கடிதம் சமூக ஊடகங்கள் வைரலாகியுள்ளது.
சுரேஷ் ரெய்னாவை வாங்காத சென்னை அணி
இதேவேளை, சென்னை அணிக்காக கடந்த 12 ஆண்டுகளாக விளையாடி வந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை. குறிப்பாக, அவர் 12 ஆண்டுகளாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த வித பாவனையும் காட்டவில்லை.
இது ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை தந்துள்ளது. சென்னை ரசிகர்களால் “சின்ன தல” என அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுக்காத சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையும் இந்தியாவிற்கு எதிரிதான்
மகேஷ் தீக்ஷனவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியதை தொடர்ந்து அந்த அணியை புறக்கணிக்குமாறு ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பாகிஸ்தான் மட்டும் இந்தியாவுக்கு எதிரியல்ல.
இலங்கை தமிழர்களை வஞ்சித்த, தமிழக மீனவர்களை தினந்தோறும் துன்புறுத்தும் இலங்கையும் இந்தியாவுக்கு எதிரிதான். பாகிஸ்தான் வீரர்களை நாடு விரும்பவில்லை என்பது போல் இலங்கை வீரர்களை தமிழர்கள் விரும்பவில்லை என பலரும் டுவிட்டரில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.