நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக கோயில்கள் உடைக்கப்படுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. இதன் மூலம் தெரிய வருவதாவது பொலிசாரின் விசாரணைகள் மந்த கதியில் நடைபெறுகின்றது என்பதே என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக கோயில் உடைப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. நேற்று முன்தினம் அக்கரபத்தனை டயகம் பகுதிகளில் சுமார் 5 கோயில்கள் உடைக்கப்பட்டுள்ளன.
ஆந்த கோயில்களில் இருந்த உண்டியல்கள் களவாடப்பட்டுளளன. அதே போல இறைவனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகளும் கலவாடப்பட்டுள்ளன. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்ஹவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளேன். அவரும் குறித்த பகுதிக்கு விசேட பொலிஸ் குழு ஒன்றை அனுப்பி வைப்பதாக என்னிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக கோயில்கள் உடைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. வெறுமனே முறைப்பாடுகளை மாத்திரம் பதிவு செய்து வைப்பதன் மூலம் எதுவும் நடைபெறாது. அது மாத்திரமன்றி கோயில் நிர்வாகத்தையும் மாத்திரமே விசாரணை செய்கின்றார்கள். எனவே சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனம் காண்பதற்கு விசேட செயல்திட்டம் ஒன்றை பொலிசார் மேற்கொள்ள வேண்டும்.
இதை விடுத்து பொலிஸ் நிலையத்தில் இருக்கின்ற முறைப்பாட்டு புத்தகத்தின் பக்கங்களை நிரப்புவதால் ஒன்றும் நடைபெறாது. கோயில்கள் என்ற காரணத்தால் பொலிசார் அக்கரை இன்றி செயற்படுகின்றார்களோ என்ற சந்தேகமும் எழுகின்றது. எனவே இந்த விடயம் தொடர்பாக பொலிசார் அதிக கவனம் செலுத்து இந்த நாசகார செயலில் ஈடுபடுகின்றவர்களை உடனடியாக அடையாளம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.