விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பிலும் அவரது குடும்பம் குறித்தும் நீதியமைச்சர்

189 0

எம்மை பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் தலைவர்  பிரபாகரனாக இருந்தாலும் கூட அவரது குடும்பத்திற்கு அவர் ஒரு உறுப்பினர். அவரது மரணம் கூட அவரது குடும்பத்திற்கு இழப்பு ஏன்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதனால்தான் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நினைக்கின்றோம் என  நீதி  அமைச்சர்  அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

யுத்த காலகட்டத்தில் தமிழர் தரப்பில் பலர் காணாமல் போயுள்ளனர் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அவர்களின் உயிரை மீண்டும் தாருங்கள் என கேட்டால் எம்மால் கொடுக்க முடியாது.

ஆகவே தான் இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் பாதிக்கப்பட்ட தரப்பின் பக்கம் அதிக முக்கியத்தவத்தை கொடுத்து தீர்வுகளை வழங்க முயற்சிக்கின்றோம். காணாமல் போனோரின் குடும்பத்தினருக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து கொடுக்க அரசாங்கமாக நாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இன்று வரை எண்ணிக்கை தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு எண்ணிக்கையை கூறிக் கொண்டுள்ளனர். யுத்த காலகட்டத்தில் குறித்து ஒரு எண்ணிக்கையானோர் காணாமல் போயுள்ளனர் என்பதை நாம் மறுக்கவில்லை. அதேபோல் பாதுகாப்புப் படைகளில் இருந்தும் நான்காயிரத்திற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர்.

பாதுகாப்புத் தரப்பிடம் இது குறித்து பதிவுகள் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் குறித்து தகவல்களை தெரிவிக்க முடிந்துள்ளது.

பாதுகாப்பு படைகளில் இருந்தே நான்காயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையானோர் காணாமல் போயுள்ளனர் என்றால் அதே எண்ணிக்கையில் அல்லது அதற்கும் அதிகமானோர் விடுதலைப் புலிகள் தரப்பிலும் காணாமல் போயிருக்க வேண்டும் என்பதே உண்மை.

இது யுத்தம் இதில் நிராயுதபாணியாக இருந்த ஒரு தரப்பை இராணுவ ஆயுதத்தால் கட்டுப்படுத்தியதாக கூற முடியாது.

விடுதலைப் புலிகளும் மிகப் பலமான சகல ஆயுத குழுக்களையும் கொண்ட அமைப்பாக இருந்தனர். ஆகவே பலமான இரண்டு தரப்புக்கு இடையிலான நேரடி யுத்தமொன்றே இங்கு இடம்பெற்று முடிந்துள்ளது.

இந்த யுத்தத்தில் தமிழர் தரப்பில் பலர் காணாமல் போயிருக்கலாம். அவர்களின் உயிரை மீண்டும் தாருங்கள் என கேட்டால் எம்மால் கொடுக்க முடியாது. ஆகவே தான் இந்த பிரச்சினைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் பாதிக்கப்பட்ட தரப்பின் பக்கத்திற்கு அதிக முக்கியத்துவத்தை கொண்டுவந்து தீர்வுகளை வழங்க முயற்சிக்கி்னறோம்.

ஆனால் இதனை தமிழர் தரப்பு நிராகரித்துக் கொண்டு காணாமல் போனவர்களின் உயிரைத் தாருங்கள் என்று கேட்டால் அவ்வாறு கொடுக்க முடியாது.

இதனை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்காது இந்த பிரச்சினைகளில் இருந்து வெளியில் வருவதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினரின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காணாமல் போனோரின் குடும்பத்தினருக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து கொடுக்க தயாராக உள்ளோம்.

இழப்பீடுகளை, மரண சான்றிதழை வழங்கத் தயாராகவே உள்ளோம். யுத்தத்திற்கு முகம்கொடுக்கும் வேலையில் இரண்டு தரப்பிலும் இழப்புக்கள் ஏற்படும். இராணுவம் மற்றும் புலிகளை தவிர்த்து பொதுமக்களும் இந்த யுத்தத்தில் காணாமல் போயிருப்பார்கள் என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் இதனையே எத்தனை காலத்திற்கு பேசிக் கொண்டு இருக்க முடியும்.

பேசிக் கொண்டே இருந்தால் எப்போதுதான் முடிவு காண்பது. ஆகவே நடந்ததை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் உயிரை மீண்டும் தர முடியாது. யார் காணாமல் போனவர்கள் என்ற தகவல்களை எமக்குத் தாருங்கள்.

அவர்கள் குறித்து நாம் விசாரணைகளை நடத்தி அதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

எம்மை பொறுத்தவரை பிரபாகரனாக இருந்தாலும் கூட அவரது குடும்பத்திற்கு அவர் ஒரு உறுப்பினர். அவரது மரணம் கூட அவரது குடும்பத்திற்கு இழப்பு ஏன்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதனால்தான் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நினைக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.