தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் நாளை பிரேமலதா பிரசாரம்

218 0

தே.மு.தி.க. மதுரை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 73 வார்டுகளில் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாகவே அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் செய்தார். மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் அவர் காணொலி காட்சி மூலம் அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டினார்.

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர்.

இந்நிலையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நாளை (17-ந்தேதி) பிரசாரம் செய்கிறார். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் தே.மு.தி.க. மதுரை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 73 வார்டுகளில் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.

அவர்களை ஆதரித்து பிரேமலதா நாளை திறந்தவேனில் சென்று பிரசாரம் செய்கிறார். மதுரை எஸ்.ஆலங்குளம் 2-வது பஸ் ஸ்டாப் பகுதியில் காலை 10.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவர், 11 மணிக்கு ஜவகர்புரத்திலும், 11.50 மணிக்கு செல்லூர் 50 அடி ரோடு பகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதனைத்தொடர்ந்து ஆரப்பாளையம் கிராஸ், பொட்டக்குளம் சொக்கலிங்கநகர், முத்துப்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று தனது கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து ஓட்டுவேட்டையில் ஈடுபடுகிறார். அதன்பிறகு திருமங்கலம் பகுதியில் மாலை வரை பிரசாரம் செய்ய உள்ளார்.

பிரேமலதா பிரசாரம் செய்வதால் தே.மு.தி.க. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், வேட்பாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.