வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

214 0

வெப் கேமரா மற்றும் கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நேரடியாக கண்காணிக்கலாம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொள்ளாட்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் 151 பேர் போட்டியிடுகின்றனர். இந்த நகராட்சியில் 89 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதுதவிர அரசியல், மதரீதியான மோதல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக 47 வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கண்காணிப்பு கேமராவுடன் வெப் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

வெப் கேமரா மற்றும் கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நேரடியாக கண்காணிக்கலாம். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

நெகமம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க.வினர் 8 பேர் உள்பட 9 பேர் போட்டியின்றி தேர்வாகி விட்டனர். மீதமுள்ள 6 இடத்திற்கு தேர்தல் நடக்கிறது. காளியப்பம்பாளையம், நாகர் மைதானம், நெகமம் அரசு மேல்நிலைபள்ளி ஆகிய 3 இடங்களில் 6 வாக்கு சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.