எடப்பாடி பழனிசாமி பொய் சொல்வதில் வல்லவர்

234 0

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றாலும் பா.ஜ.க.வின் அடிமையாக அ.தி.மு.க. இருப்பதை மறுக்க முடியாது என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை பாராளுமன்றம், சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெற்றோமோ அதே போன்று உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணி பெறும். தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கின்றார்.

இந்தியாவில் உள்ள முதல்-அமைச்சர்களில் கடுமையாக உழைக்கக்கூடியவர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். அவர் பதவி ஏற்ற நாளில் இருந்து 9 மாதமாக கடுமையாக உழைத்து வருகிறார். அவரை பார்த்து நான் பெருமை அடைகிறேன். அவர் தேர்தல் பரப்புரையை காணொலி மூலம் பேசுவதை பா.ஜ.க.வை சேர்ந்தவர்களும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று 500 பேரை தான் சந்திக்க முடிகிறது. ஆனால் முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கான மக்களை சந்தித்து வருகிறார். இன்று அ.தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி உளறுவதிலும், பொய் சொல்லுவதிலும் வல்லவராக இருக்கிறார்.

குறிப்பாக கொட நாட்டில் நடந்த கொலை, கொள்ளைகளில் பழனிச்சாமியின் பங்கு பெரும் பங்கு என விசாரணைக்கு பிறகு முழுமையாக வெளிவரும். கண்டிப்பாக நீதிமன்றத்தில் கண்டிக்கப்படுபவர்களில் முதன்மையானவராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கப் போகிறார்.

அது அவருக்கு மிக நன்றாக தெரியும். அதனால் தான் சட்டசபையில் கொடநாடு வழக்கு தொடர்பாக அவர் பேசியபோது தன்னை சிறையில் தள்ள முயற்சி நடப்பதாக கூறி, தன்னை குற்றவாளி என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சேலத்தில் அவரது பணத்தை முடக்கி வைத்தார். தற்போது யோக்கிய சிகாமணி போல் பேசுகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு இதுதான் கடைசி பரப்புரையாக இருக்கும்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றாலும் பா.ஜ.க.வின் அடிமையாக அ.தி.மு.க. இருப்பதை மறுக்க முடியாது. சமூகநீதி குறித்து பேச தார்மீக உரிமையை அ.தி.மு.க. இழந்து விட்டது. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரை மறந்து விட்டனர். அடுத்து ஜெயலலிதாவையும் மறந்து விடுவார். இதேப்போல் அ.தி.மு.க.வை மக்களும் மறந்து விடுவார்கள்.

ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தலை அமல்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. இதற்காகக்தான் கர்நாடகாவில் மோசமான சம்பவம் நடந்து வருகிறது. பள்ளி மாணவர்களை இதில் பலிகடாவாக்குகின்றனர்.

ஒரே கொடி, ஒரே கலாச்சார, ஒரே கொள்கை தீவிரமாக அமல்படுத்தினால் சோவியத் யூனியன் சிதறுண்டதை போல் இந்தியாவும் சிதறவதற்கு வாய்ப்பு உள்ளது. நாட்டின் மீது பற்று உள்ளவர்கள் பா.ஜ.க.வை நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.