அனுபவிக்கும் விளைவுக்கு அரசாங்கமே பொறுப்பு

189 0
இலங்கை கத்தோலிக்க திருச்சபையானது, வத்திக்கானுடன் இணைந்து ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கையை மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்த கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், இதனால் இலங்கை அனுபவிக்கும் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை கர்தினால் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கத்தோலிக்க திருச்சபை, வத்திக்கானுடன் இணைந்து ஒரு நடவடிக்கையை ஏற்பாடு செய்துள்ளது என்றும் ஆனால் அது பற்றி நாங்கள் இப்போது எதையும் வெளியிட மாட்டோம் என்றும் கர்தினால் மல்கம் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு சர்வதேச உதவியை நாடினால், அதன்மூலம் இலங்கை அனுபவிக்கும் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

சமூக ஆர்வலர் ஷெஹான் சானக்க, திங்கட்கிழமை (14) கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய பேராயர், இதுகடத்தல் என்று குற்றம் சாட்டினார்.

வீதியில் செல்லும் போது ஒரு வெள்ளை வானில் ஷெஹான் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது எனவும் குறிப்பிட்டார்.

மக்களைக் கைது செய்வதற்கு நாகரீகமான வழிகள் இருக்கின்றன எனவும் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவது தமது கடமையல்ல என்பதை சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.