சென்னையில் 33 லட்சம் பேருக்கு வீடு வீடாக ‘பூத் சிலிப்’ வினியோகம்

238 0

வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிகளுக்கு முன்பாக செயல்படும் மையங்கள் மூலம் பூத் சிலிப் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேவையான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையரும், கமி‌ஷனருமான ககன்தீப்சிங் பேடி செய்து வருகிறார்.

மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் 61 லட்சத்து 55 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 5,648 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று காலம் என்பதால் வாக்களிக்க மாலை 6 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் வீடு வீடாக பூத் சிலிப் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி ஊழியர்கள் மூலம் இந்த பணி கடந்த சனிக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியில் 4,399 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் உள்ள வாக்காளர்களை சந்தித்து பூத் சிலிப்களை வழங்கி கையெழுத்து பெறுகிறார்கள்.

நேற்று முன்தினம் வரை 15 லட்சம் பேருக்கு பூத் சிலிப் வினியோகிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 18 லட்சத்து 11 ஆயிரத்து 357 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 33 லட்சத்து 20 ஆயிரத்து 653 வாக்காளர்களுக்கு இதுவரையில் பூத் சிலிப் வினியோகிக்கப்பட்டுள்ளது. 55 சதவீத அளவில் பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரம் நாளை மறுநாள் முடிவதால் அதற்குள்ளாக பூத் சிலிப்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இந்த பணியை இன்னும் வேகப்படுத்த வேண்டும் என்று ஊழியர்களுக்கு மாநகராட்சி கமி‌ஷனர் உத்தரவிட்டுள்ளார்.

2 நாட்களில் பூத் சிலிப் கொடுக்கும் பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூத் சிலிப் வழங்கும் போது வீடுகள் பூட்டப்பட்டு இருந்தால், அவர்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்படும்.

அதனால் வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிகளுக்கு முன்பாக செயல்படும் மையங்கள் மூலம் பூத் சிலிப் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.