பாலாற்று நீரை சேமிக்க ஆங்காங்கே 4 முதல் 5 அடி உயரமுள்ள தடுப்பணைகள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகம் கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
தமிழகத்தில் திருப்பத்தூர் நகராட்சி பழமையும், பெருமையும் வாய்ந்த நகராட்சி ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் இருண்ட ஆட்சி நடைபெற்றது. இதை பொருத்துக்கொள்ள முடியாத மக்கள் கடந்த சட்டப்பேரவை தேர்தல் மூலம் தி.மு.க. அரசை தேர்ந்தெடுத்தனர்.
தி.மு.க. ஆட்சி அமைத்து 9 மாதங்கள் ஆகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தும், நினைத்ததை சாதிக்க முடியவில்லை. காரணம் கொரோனா பெருந்தொற்று.
இந்த 9 மாதங்கள் கொரோனாவை சமாளிக்கவே நேரம் சரியாக இருந்தது. இது போக சமீபத்தில் பெய்த கனமழையால் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவே எங்களுக்கு நேரம் சரியாக இருந்தது.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழக மக்கள் நாட்டை ஆள தகுதியுள்ள தலைவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
அதேபோல, உள்ளாட்சி தேர்தலிலும் தகுதியான கவுன்சிலர்களை தேர்வு செய்ய வேண்டும். நல்ல கவுன்சிலர்களை தேர்வு செய்தால் அரசின் திட்டங்களும், அதற்காக ஒதுக்கீடு செய்யும் பணமும் மக்கள் வளர்ச்சிக்கு பயன்பெறும். தகுதியில்லாதவர்களை தேர்வு செய்தால் எந்த பயனும் கிடைக்காது.
கட்சி உறுப்பினர் தவறு செய்தால் அவர் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் ஒரே கட்சி தி.மு.க. மட்டுமே. தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் அமைச்சரவை பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னிடம் கொடுத்து, உங்களுக்கு எந்த துறை வேண்டுமென்று கேட்டார்.
நான் நீர்வளத்துறை வேண்டுமென்றேன். காரணம், ஆற்று நீரை சேமித்து தமிழகத்தில் விவசாயத்தை செழிக்க வேண்டும்மென்பதால் நீர்வளத்துறையை நான் தேர்வு செய்தேன்.
வறட்சியான பூமியை பசுமையான பூமியாக மாற்ற பல திட்டங்கள் தயாரித்து வைத்துள்ளேன். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அதை நிறைவேற்றுவேன். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், குடியாத்தம் மோர்தானா அணை, ராஜா தோப்பு அணை, திருப்பத்தூர் அருகே ஆண்டியப்பனூர் அணைகளை நான் அமைச்சராக இருந்தபோது கட்டினேன்.
அதேபோல, தமிழகம் முழுவதும் 42 அணைகளை நான் அமைச்சராக இருந்த காலத்தில் கட்டப்பட்டுள்ளன. அதேபோல, பாலாற்று நீரை சேமிக்க ஆங்காங்கே 4 முதல் 5 அடி உயரமுள்ள தடுப்பணைகள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
100 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலாற்றுப்பகுதியில் 2 தடுப்பணைகள் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட வளர்ச்சிக்கு என்னென்ன தேவையோ அதை செய்து முடிப்பேன்.
குறிப்பாக அடுத்த 4 ஆண்டுகளில் தென்பெண்ணை – பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவேன். இதன் மூலம் விவசாயம் செழிக்கும், குடிநீர் பிரச்சினை தீரும், அடுத்த 50 ஆண்டுகளுக்கு என் பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.