மீனவர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து நிலையிலும் முதல்வர் பாராட்டும் வகையில் செயல்படுகிறார் என்று ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கூறினார்.
2014-ம் ஆண்டு முதல் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படவில்லை என்று மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் முருகன் கூறியிருப்பது சரியல்ல.
2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை இரு முறை இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படும் என கூறினர். ஆனால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகின்றனர்.
நீட் உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய அரசு மற்றும் கவர்னரின் செயல்பாடு ஏற்கத்தக்கதல்ல. தமிழக உரிமைகள் பறிபோவதை ஏற்க முடியாது.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை அரசு ஏலம் விட்டுள்ளது. ஆனால், பா.ஜனதாவினர் ஏலம் விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். இது சரியல்ல.
ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டம் மீனவர்களுக்கு ஏற்புடையதல்ல. இலங்கை தமிழர்களுக்கு தமிழகத்தில் உள்ள ஆதரவை சீர்குலைக்கும் வகையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே மோதல் போக்கை இலங்கை அரசு ஏற்படுத்தி வருகிறது. மீனவர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து நிலையிலும் முதல்வர் பாராட்டும் வகையில் செயல்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.