ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் – சிவில் சமூக செயற்பாட்டாளர் கைது – மல்கம் ரஞ்சித் கடும் கண்டனம்

221 0

சிவில்சமூக செயற்பாட்டாளர் செகான் மாலக்க கைதுசெய்யப்பட்டதையும் ஊடகவியலாளர் சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் கர்தினால் மல்கம் ரஞ்சித் கடுமையாக கண்டித்துள்ளார்.

அருட்தந்தை சிறில் காமினிபெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார். இரண்டு சம்பவங்கள் குறித்து தனது அதிர்ச்சியை கர்தினால் தெரிவித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னால் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன இவை சர்வதேச அளவில் இலங்கைக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பரப்புரையில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்படுவதும் – ஊடகங்கள் உண்மையை மக்களிற்கு தெரிவிப்பதை தடுப்பதற்கான முயற்சிகளும் கவலையளிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையை அறிவதற்கான உரிமை அனைத்து பிரஜைகளிற்கும் உள்ளது அவர்கள் ஊடகங்கள் ஊடாகவே உண்மையை அறிகின்றனர் என தெரிவித்துள்ள அவர் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் உண்மையை மறைப்பதற்கான முயற்சி எனவும் தெரிவித்துள்ளார்.