கிராமங்களை நோக்கி படையெடுக்கும் காட்டு விலங்குகள்

242 0

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினையடுத்து காட்டு விலங்குகள் உணவு தேடி கிராமங்களுக்கு படையெடுத்துள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில்  பல பகுதிகளில் உள்ள காடுகளுக்கு கடந்த காலங்களில் விசமிகளால் தீ வைக்கப்பட்டதன்  காரணமாக பெருமளவான காட்டு வளங்கள் அழிக்கப்பட்டன.

இதன் காரணமாக காடுகளில் நீர் நிலையகள் வற்றிப்போய் காட்டில் வாழும் உயிரினங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுகளை தேடி மக்கள் வாழும் குடியிருப்புக்களை நோக்கி வர ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக காட்டில் வாழும் குரங்குகள் தற்போது ஹட்டன் நகர் பகுதியினை அண்மித்த தும்புறுகிரிய, ஆரியகம, இந்துமாசபை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு கூட்டம் கூட்டமாக உணவு தேடி வர ஆரம்பித்துள்ளன.

இதனால் வீட்டுத்தோட்டங்களில் உள்ள வாழை உள்ளிட்ட பழவகைகளை குரங்குகள் சேதமாக்க ஆரம்பித்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் இந்த குரங்குகள் மின்இணைப்புகள் மற்றும் தொலைகாட்சி இணைப்புகள் உள்ளிட்டவைகளையும் சேதப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே பொறுப்புவாய்ந்தவர்கள் இது குறித்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.