ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை கலந்துகொள்வதாகத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்தின் பெரும்பான்மையான சமூகம் ஏற்றுக்கொள்ளும் என வலியுறுத்தினார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்செலட்டினால் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த அறிக்கை மார்ச் 3 ஆம் திகதி விவாதிக்கப்படும் என்றும் இந்த அறிக்கையின் பிரதியை வெளிவிவகார அமைச்சுக்கு வழங்குவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஐந்து நாட்களுக்குள் இலங்கை பதில் அளிக்க வேண்டும் என்றும், உரிய பதில்கள் கவனமாக தொகுக்கப்பட்டு பெப்ரவரி 19 ஆம் திகதி ஜெனிவாவுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை கலந்துகொள்வதாகவும் இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்தின் பெரும்பான்மையான சமூகம் ஏற்றுக்கொள்ளும் என வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தினார்.