சல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் திருச்சியிலும் ஆயிரக்கணக்கான இளையோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையடியில் ஒன்றுகூடிய மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளையோர் உள்ளிட்டவர்களது போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகின்றது.
வாடிவசல்கள் திறக்கும் வரை வீட்டு வாசல்களை மிதியோம் என்ற உறுதியுடன் போராடிவரும் தமிழக இளையோரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருச்சி வாழ் ஈழத் தமிழ் இளைஞர்கள் இன்றும் பங்கேற்றிருந்தார்கள்.
தடை அதை உடை! புது சரித்திரம் படை!
அடிமைகளாய் நாம்! அடிமாடுகளாய் நம் காளைகள்!
இப் படை தோற்கின் எப் படை வெல்லும்!
வேண்டும் வேண்டும் சல்லிக்கட்டு வேண்டும்!
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!
உணர்வால் ஒன்றிணையும் தமிழர் தாயகம்!
எனும் வாசகங்கள் எழுதிய பதாகைகள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத் தமிழ் இளையோர் முழக்கங்களை எழுப்பியிருந்தார்கள்.
திருச்சியில் இருந்து இரா.மயூதரன்.