3,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் வலிமையான சுண்ணாம்பு தளம்

380 0

3,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் வலிமையான சுண்ணாம்பு தளம் தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில்  மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகளில் 45-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் இந்திய மத்திய தொல்லியல் துறை சார்பில், 17 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி அகழாய்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்திய மத்திய தொல்லியல் துறையின் திருச்சி பிராந்திய பணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அகழாய்வு பணிகளுக்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பிரதேசத்தில் 3 இடங்களில் 28-க்கும் மேற்பட்ட குழிகள்தோண்டப்பட்டன. இதன் போது 45 வரையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சங்க காலத்தில் இங்கு மக்கள் வாழ்ந்த வாழ்விடப்பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது 3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு மக்கள் வாழ்ந்துள்ளமைக்கான அடையாளமாக, இங்கு சுண்ணாம்பு தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தளம் மிகவும் வலிமையாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிப்பாளரும், திருச்சி பிராந்திய பணிப்பாளருமான அருண்ராஜ் தெரிவிக்கையில்,

ஆதிச்சநல்லூரில் தோண்டப்பட்ட குழிகளை இறுதி செய்து, எந்த குழியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கலாம் என முடிவு செய்து, அதன் மீது கண்ணாடித் தளம் அமைக்கப்படும்.

மேலும், பிரம்மாண்டமாக அரங்கம் அமைத்து, இந்த குழிகளை பாதுகாப்பதற்காக விலை மனுக்கள் கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஆய்வாளர்களை அழைத்து, அவர்கள் துறை மூலமாக ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

ஆதிச்சநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.