அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2021-2022, யேர்மனி.

1772 0

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2021-2022

எமது அன்றாட வாழ்க்கையை கொரோனா என்னும் தொற்றுநோய் தொடர்ந்தும் அல்லலுற வைத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வை மிகவும் கவனமாகவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் யேர்மனிய சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கேற்பச் சிறந்த பொறிமுறைகளைக் கடைப்பிடித்து 29.01.2022 சனிக்கிழமை நிறைவேற்றியுள்ளது.

சென்ற ஆண்டு மின்னியற் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தமிழ்க்கல்வியூட்டும் நிலை ஏற்பட்டிருந்த போதிலும் அனைத்துத் தமிழாலயங்களும் இன்று வழமையான இயங்குநிலையை அடைந்துள்ளன என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்வனைத்துலக அரையாண்டுத்தேர்வு நாடுதழுவிய மட்டத்தில் 100க்கு மேற்பட்ட தேர்வு நிலையங்களில் நடைபெற்று நிறைவுற்றுள்ளது. ஒவ்வொரு நிலையத்திற்கும் ஒவ்வொரு சிறப்புக் கண்காணிப்பாளர் என்ற அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியப்பெருந்தகைகள் தமிழ்க் கல்விக் கழகத்தின் விதிமுறைகளுக்கேற்ப கடமையுணர்வோடும் தமிழை வளர்க்கும் நல்லெண்ணத்தோடும் இப்பணியில் ஈடுபட்டனர்.

பெரும்பாலான தமிழாலயங்கள் தனியாகவும் சில தமிழாலயங்கள் இணைந்தும் தேர்வு நிலையங்களை அமைத்திருந்தன. தேர்வு மண்டபம் காலச்சூழ்நிலைக்கேற்ப, சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கிணங்க நுழைவாயிலில் தொற்றுநீக்கிகள் வைத்தவாறு அமைக்கப்பட்டிருந்தது. காலை 8:00 மணி தொடக்கம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் முகக்கவசங்கள் அணிந்தவாறு தேர்வுமண்டபத்தை நோக்கி வருகைதரத் தொடங்கினார்கள். கொரோனா தொற்றுநோய் உறுதிப்படுத்தல் செய்து, அது எதிர்மறை (negative) என்பவர்களே மண்டபத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். காலை 9:00 மணிக்கு ஆரம்ப நிகழ்வுகளுடன் தொடங்கப்பட்ட அனைத்துலக அரையாண்டுத்தேர்வு, 9:30 மணிக்கு தேர்வாளர்கள் அனைவரையும் தேர்வு மண்டபத்தில் அமர்த்தி சரியாக 10:00 மணிக்குத் தேர்வு தொடங்கப்பட்டது.

ஆண்டு 1 தொடக்கம் 3 வரை 11:30 மணிக்கும், ஆண்டு 4 தொடக்கம் 7 வரை 12:00 மணிக்கும் ஏனைய வகுப்பு நிலைகளுக்கு 12:30 மணிக்கும் தேர்வு நிறைவேறியது. தாம் கற்றவற்றை மிக ஆவலுடன் சிறப்புறத் தேர்வெழுதிய மாணவர்கள், தேர்வு நிறைவடைந்த பின் தங்கள் கருத்துகளை பெற்றோர்களுடனும் சகமாணவர்களுடனும் தங்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுடனும் பரிமாறி மகிழ்ந்ததைக் கண்காணிக்கக்கூடியதாக இருந்தது.