ஷின் ஜியாங்கில் தொடரும் சீனாவின் அடக்குமுறை?

253 0

ஷின்ஜியாங் பகுதியில் உய்குர் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக சீனா தனது கலாசார இனப்படுகொலையை சீனா நிறுத்தாது தொடர்வதோடு கடுமையான அடக்குமுறைகளையும் அமுலாக்கி வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

‘இன சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் படிப்படியாக மோசமடைந்துள்ளன. சீன அரசாங்கம் அவர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களை தடுப்பு முகாம்களுக்குள் இணைத்துள்ளது, அங்கு அவர்கள் அரசியல் போதனை, கட்டாய கருத்தடை மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்’ என அட்லாண்டிக் பத்திரிகையாளர் யஸ்மீன் செர்ஹான் குறிப்பிட்டுள்ளார்.

“லண்டனில் உள்ள ஐநா அலுவலகத்திற்கு வெளியே திபெத்தியர்களும் உய்குர்களும் சீனாவுக்கு எதிரான ‘கருப்பு நாள்’ போராட்டத்தை நடத்தினர். உய்குர்கள் மீதான இலக்கு முகாம்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை.

2016 முதல், நூற்றுக்கணக்கான கல்லறைகள் மற்றும் மத இடங்கள் ஆகியன அழிக்கப்பட்டுள்ளன. ஷின்ஜியாங் பள்ளிகளில் மண்டரின் மொழிக்கு ஆதரவாக பிரசாரங்கள் வலியுத்துள்ளதோடு உய்குர் மொழி தடை செய்யப்பட்டுள்ளது.

உய்குர்களின் பிரதான நம்பிக்கையான இஸ்லாத்தை கடைப்பிடிப்பதை ‘தீவிரவாதத்தின் அடையாளம்’ என்று அடையாளப்படுத்தப்பட்டு வருதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கலாசாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நாட்டிற்கு வெளியே வாழும் உய்குர்களுக்கு ஏற்படுகிறது. பிற நாடுகளில் வசிக்கும் உய்குர்களின் மீதான சுமை அவர்களின் தாயகத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட அதிகமாகவுள்ளது.

ஆகவே பலர் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் ஏற்படும் செலவுகளுக்கு அப்பால் பெரும் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உய்குர்கள் யார் என்று சிலருக்குத் தெரிந்திருக்கும் நாடுகளில் அவர்களின் அடையாளத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதும், அவர்களின் மொழி, உணவு, கலை மற்றும் பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டால் உலகம் எதை இழக்க நேரிடும் என்பது ஒருபுறம் இருக்க, அவர்களின் அடிப்படைகளை மறுதலிக்க கூடாது என்பது மனித குணாம்சம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியா, பிரான்ஸ், துருக்கி மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் உய்குர்களை யஸ்மீன் செர்ஹான் நேர்காணல் செய்துள்ளார். அதனடிப்படையிலேயே இவ்விதமா கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், ‘உய்குர்கள் அனைவரும் தங்கள் பாரம்பரியத்தை வருங்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்வதை உறுதி செய்வதில் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் தோல்வியுற்றால் தமது இனம் ஆபத்தில் இருக்கும் என்பது பற்றி அவர்களில் யாரும் எந்த மாயையிலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறிருக்க, ஒவ்வொரு உய்குரும் இப்போது மிகப்பெரிய உளவியல் அழுத்தத்தில் உள்ளனர், என்று உய்குர்கள் பற்றி வொஷிங்டனைத் தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் திட்டத்தின் இயக்குனர் ஓமர் கானட், கூறியுள்ளார்.

உய்குர் மனித உரிமைகள் திட்டத்தின் தரவுகளின் படி பாடகர்கள், இசைக்கலைஞர்கள், நாவலாசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான முக்கிய உய்குர் கலாச்சார பிரமுகர்கள் 2017 முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.

வொஷிங்டனில் உள்ள உய்குர் கவிஞரும் திரைப்பட இயக்குநருமான தாஹிர் ஹமுத் இஸ்கில், உய்குர் மொழி வெளியீடுகளை சீன அரசாங்கம் ‘மறுபரிசீலனை’ செய்யத் தொடங்கியபோது, உய்குர் கலாசாரக் கோளத்தின் மீதான அடக்குமுறை குறைந்தது 2012ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அதில் திரைப்படங்கள் மற்றும் இசை, வெளியீடுகள் என்பன தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், பிரிவினைவாதத்தை எதிர்ப்பது, தாய்நாட்டை நேசிப்பது, கட்சியை நேசிப்பது, மக்களின் ஒற்றுமை போன்ற தலைப்புகளில் உய்குர் இசை மற்றும் நடனக் குழுக்கள் முழுக்க முழுக்க சீன மொழியில் நிகழ்ச்சிகளை நடத்தக் கடமைப்பட்டிருந்தன’ என்றும் இஸ்கில் கூறுகின்றார்.

ஷின்ஜியாங்கில் சுமார் 10 மில்லியன் உய்குர் மக்கள் வசிக்கின்றனர். ஷின்ஜியாங்கின் மக்கள்தொகையில் சுமார் 45சதவீதத்தை கொண்ட துருக்கிய முஸ்லிம் குழு, சீனாவின் அதிகாரிகள் கலாசார, மத மற்றும் பொருளாதார பாகுபாடுகளைச் செய்வதாக  நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ஐ.நா. நிபுணர்களின் கூற்றுப்படி, ஷின்ஜியாங்கில் உள்ள முஸ்லிம் மக்கள் தொகையில் சுமார் ஏழு சதவீதத்தினர் ‘அரசியல் மறு கல்வி’ முகாம்களின் விரிவாக்க வலையமைப்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

‘சீனா கேபிள்ஸ்’ எனப்படும் வகைப்படுத்தப்பட்ட ஆவணங்கள், கடந்த ஆண்டு சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பால் அணுகப்பட்டன, அது சீன அரசாங்கம் உலகெங்கிலும் உள்ள உய்குர்களைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

பயங்கரவாதம், ஊடுருவல் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முற்றிலும் கருணை காட்டக்கூடாது’ என்ற ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் உத்தரவுகளின் கீழ், சீனா கடந்த மூன்று ஆண்டுகளாக ஷின்ஜியாங்கில் ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட உய்குர் மற்றும் இதர முஸ்லிம் சிறுபான்மையினரை தடுப்பு முகாம்களிலும் சிறைகளிலும் அடைத்து வைத்துள்ளது என்று அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளன.

இருப்பினும், சீனா தொடர்ந்து இத்தகைய தவறான வெளிப்படுத்தல்களை மறுக்கிறது. முகாம்களில் தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்று கூறுகின்றது.

உய்குர் ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் கைது செய்யப்பட்டவர்களில் பலர் உயர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் தங்கள் சமூகங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளதோடு அவர்களுக்கு எந்த சிறப்புக் கல்வியும் தேவையில்லை என்று எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள், கட்டாய அரசியல் போதனை, சித்திரவதை, மற்றும் உணவு மற்றும் மருந்து மறுப்புக்கு உட்படுத்தப்பட்டதை விவரித்துள்ளனர், மேலும் அவர்கள் தங்கள் மதத்தை கடைப்பிடிக்கவோ அல்லது அவர்களின் மொழியைப் பேசவோ தடைசெய்யப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

இப்போது, பெய்ஜிங் இவ்விதமான குற்றங்களை மறுத்துள்ளது. அத்துடன் சீனா தனது பிராந்தியங்களில் சுயாதீன ஆய்வுகளை அனுமதிக்கவும் மறுக்கிறது, அதேநேரத்தில், சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான சீனாவின் அட்டூழியங்கள் தொடர்பான அறிக்கைகளை மேலும் ஆராய்வதற்கும் தூண்டுகின்றது எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.