ரஷியாவை நோக்கி செல்லும் நேட்டோ படைகளின் கப்பல்கள்: போர் பதற்றம் அதிகரிப்பு

223 0

உக்ரைன் மீது ரஷிய எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், நேட்டோ படைகள் போர் கப்பல்களை அனுப்பியுள்ளது.

ரஷியா – உக்ரைன் இடையே எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.
அதேபோல் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் ரஷியாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும் உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்று தொடர்ந்து எச்சரித்து வருகிறது. அப்படி நடந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அயர்லாந்து நாட்டின் கடற்கரைக்கு 240 கிலோ மீட் டர் தொலைவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் ரஷியா ராணுவ பயிற்சியில் ஈடுபட இருக்கிறது. இதற்கு அயர்லாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அயர்லாந்துக்கு ஆதரவாக கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்துக்கு கூடுதல்படைகளை நேட்டோ அனுப்பி வருகிறது. அங்கு தங்களது படை பலத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ள நேட்டோ பால்டிக் கடல் பிராந்தியத்துக்கு கூடுதல் படைகள், தளவாடங்கள், போர்க்கப்பல்களை  அனுப்பி வருகிறது.
நேட்டோ படை கப்பல்
அமெரிக்கா தலைமையில் இயங்கும் நேட்டோ படையில் உள்ள டென்மார்க் நவீன போர் விமானங்களை லிர்துனியாவுக்கு அனுப்புகிறது. ஸ்பெயின் நாடு பல்கேரியாவுக்கு போர் கப்பல்கள், விமானங்களை அனுப்புகிறது.
அதேபோல் பிரான்ஸ் தனது கூடுதல் படைகளை ருமேனியாவுக்கு அனுப்ப தயார் நிலையில் வைத்துள்ளது. கிழக்கு ஐரோப்பியாவில் நேட்டோ படைகளை விரிவுப்படுத்தக்கூடாது என்று ரஷியா வலியுறுத்தும் நிலையில் அங்கு நேட்டோவின் கப்பல்கள் விரைந்துள்ளது பதட்டத்தை அதிகரித்துள்ளது.