கென்யா மற்றும் உகண்டாவில் இருந்து தனியார் ஜெட் விமானத்தின் மூலம் நான் இலங்கை வந்தது உண்மைதான். அதேபோல நான் வருகை தந்த அதே ஜெட் விமானத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச திருப்பதிக்கு செல்ல ஏற்பாடு செய்தேன் என்பதும் உண்மை. அதில் என்ன தவறு உள்ளது என ஆபிரிக்காவிற்கான இலங்கை பிரதமரின் சிறப்பு தூதுவர் வேலுப்பிள்ளை கணநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், எனது விருப்பத்திற்கு அமைய ஜெட்டில் நான் யாருடனும் பயணிக்க முடியும். ராஜபக்ச குடும்பத்துடன் நான் மிகவும் நெருக்கமான நட்புறவையும் சகோதரத்துவத்தையும் மேற்கொண்டு வருகின்றேன். எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களுடன் கைகோர்த்தே நின்றேன். இனியும் நிற்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஒரு நாட்டின் அரச தலைவரின் வெளிநாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை அவதானிப்பது குடிமக்களின் உரிமையாகும். அத்தகைய வருகைகளால் நாடு எவ்வாறு பயனடைகிறது? என்ன நடக்கின்றது? என்பது குறித்து அவதானிக்கப்படும்.
இந்த நோக்கத்திற்காகவே ஒவ்வொரு வருகையின் முடிவிலும் பயணம் பற்றிய விவரங்களை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க ஒரு செய்திக்குறிப்பு அல்லது அறிக்கை வெளியிடப்படுகின்றது.
ஆனால் ஒரு நபரது தனிப்பட்ட வருகைகளின் விபரங்கள் தனிப்பட்டதாக வைக்கப்படும். எவ்வாறாயினும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் சமீபத்திய திருப்பது விஜயம் அவர் தனியார் ஜெட் விமானத்தில் பயணம் செய்ததன் காரணமாக சமூக ஊடகங்களில் பெரும் ஊகங்களுக்கு உட்பட்டது.
இது அரசாங்கத்திற்கு எந்த செலவும் இல்லாமல் தனிப்பட்ட பயணம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து நான் எதுவும் சொல்வதற்கு இல்லை.
அதே காலகட்டத்தில் கென்யா மற்றுமு் உகண்டாவில் இருந்து நான் இலங்கைக்கு தனியார் ஜெட் விமானத்தில் வந்தது உண்மை தான். எனது விருப்பப்படி எந்த பயண முறையையும் தேர்வு செய்து எனது உரிமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.