பசில் சம்பந்தப்பட்ட மல்வானை வீடு தொடர்பான வழக்கு:சாட்சியாளருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம்

183 0

கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே மல்வானை பிரதேசத்தில் வீட்டை நிர்மாணிப்பதற்கான பணத்தை தான் செலவிட்டதாக தேசிய இறைவரி திணைக்களத்திற்கு அறிவித்ததாக கட்டிட நிர்மாண கலைஞர் முதித்த ஜயகொடி என்ற சாட்சியாளர் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

தொம்பே மல்வானை மாபிட்டிகம வீதியில் அமைந்துள்ள 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து, ஆடம்பர வீடு, நீச்சல் தடாகம் நிர்மாணித்து விலங்கு பண்ணை நடத்த அரச பணத்தை தவறான பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு கடந்த 21 ஆம் திகதி கம்பஹா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது சட்டத்தரணி சாலிய பீரிஸின் குறுக்கு கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதித்த ஜயகொடி இதனை கூறியுள்ளார். இந்த வழக்கை தற்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது உறவினரான திருகுமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அரச சட்டத்தரணிகளான ஒஸ்வல் பெரேரா, அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சனில் குலரத்ன ஆகியோர் முறைப்பாட்டாளரான சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகினர்.

அன்றைய தினம் முதித்த ஜயகொடியின் சாட்சி விசாரணை நிறைவு செய்யப்பட்டது. மேலும் நான்கு சாட்சியாளர்களை எதிர்வரும் மார்ச் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிப்பாணை விடுக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் முன்னிலையான அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திருகுமார் நடேசன் ஆகியோரையும் மார்ச் 11 ஆம் திகதி மீண்டும் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கில் நவீன் மாரப்பன, டி.ஏ.பீ.வீரரத்ன, ஜயந்த வீரசிங்க, காமினி மாரப்பன ஆகிய ஜனாதிபதி சட்டத்தரணிகளுடன் 23 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.