துரோகிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்

226 0

சுமந்திரன் வெளிநாட்டுக்குச் சென்ற பொழுது அவரது செயல்கள் எந்த அளவு பிழை என்பதை சுட்டிக்காட்டி மக்கள் அவருக்கு எதிராக அணிதிரண்ட மாதிரியான ஒரு நிலைமையை இந்த ஊரிலே இந்தத் துரோகச் செயலைச் செய்து வீட்டுக்குபோக முடியாத நிலையை நீங்கள் உருவாக்காமல் அவர்களது துரோகச் செயலை நாங்கள் தடுத்து நிறுத்த முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அரியாலையில் நேற்றைய தினம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தச் சட்டத்துக்குள் முடக்கும் சதி முயற்சியை தோற்கடிப்போம் எனும் தலைப்பிலான அரசியல் விளக்க கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வரப்போகின்ற புதிய அரசியலமைப்பு ஏற்கனவே தயாரிக்கப்பட்டு ஜனவரி மாத இறுதியில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு வரவுள்ளது. பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்புக்கு வழங்காமலேயே புதிய அரசியலமைப்பு நிறைவேறுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.

வரவுசெலவுத்திட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் அரசியலமைப்பு தயாரிப்பில் ஈடுபட்ட அரசாங்கத்தின் சட்டத்துறை சார்ந்த மிக முக்கிய உறுப்பினரை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் நான் கேட்டேன். புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புக்கு போகுமா என்று கேட்டபோது, இலங்கையின் நிறைவேற்றப்பட்டு இருக்கின்ற அனைத்து அரசியல் அமைப்புகளும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் மட்டும் நிறைவேற்றப்பட்டது போன்றே புதிய அரசியலமைப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும். சர்வஜன வாக்கெடுப்புக்கு போகவேண்டிய தேவையில்லை.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்பு நிறைவேற்றப்படுகின்ற போது பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய வாக்கு முக்கியமானது.

வடகிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் இருக்கிறார்கள். 5 பேர் அரசாங்கத்துடன் நேரடியாக பங்காளிகளாக இருக்கின்றனர். அந்த ஜவரும் நிச்சயமாக அரசாங்கம் கொண்டு வருகின்ற புதிய அரசியலமைப்பை ஆதரிக்கப் போகிறார்கள்.

மீதி 13 பேரிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இருவரைத் தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 10 பேரும் விக்னேஸ்வரனும் இவ்வளவு காலமும் நிராகரித்த 13ஜ ஏற்றுக்கொள்கின்ற ஒரு முடிவில் இருக்கின்றார்கள்.

கடந்த வாரம் தெற்கிலுள்ள ஆங்கில ஊடகம் இந்த புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் குழுவில் இருக்கக்கூடிய முக்கியமான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்த்தனவிடம் 13ஆம் திருத்தத்தின் உடைய அம்சங்கள் நீங்கள் தயாரிக்கும் புதிய அரசியலமைப்பில் நீக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றதே என கேள்வி எழுப்பிய போது அதற்கு அவர் சொன்ன பதில் 13ஆம் திருத்தத்தை நீக்க முடியாது என்றார்.

கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் புதிய அரசியலமைப்பில் அரசாங்கம் 13ஆம் திருத்தத்தை நீக்க இருக்கின்றது என்றும் அது இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்றும் அதனால் தான் நாங்கள் 13ஆம் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்குறோமே தவிர அதை நாங்கள் தீர்வாக ஏற்கவில்லை என்று எங்களிடம் கூறுகிறார்கள்

சர்வஜன வாக்கெடுப்புக்கு போவதாக இருந்தால் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற முகவர்கள் பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பை ஆதரித்தாலும் சர்வஜன வாக்கெடுப்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தி தோற்கடிக்கமுடியும்.

ஆனால் சர்வஜன வாக்கெடுப்புக்கு விட போவதில்லை என்று சொன்னால் அவர்களது துரோகச் செயலை நாங்கள் அனுமதிக்க முடியாது. அதனால்தான் நாங்கள் மக்கள் சந்திப்புக்களை நடாத்தி இந்த உண்மைகளை மக்களுக்கு கூறுகின்றோம்.

சுமந்திரன் வெளிநாட்டுக்குச் சென்ற பொழுது அவரது செயல்கள் எந்த அளவு பிழை என்பதை சுட்டிக்காட்டி மக்கள் அவருக்கு எதிராக அணிதிரண்ட மாதிரியான ஒரு நிலைமையை இந்த ஊரிலே இந்தத் துரோகச் செயலைச் செய்து வீட்டுக்குபோக முடியாத நிலையை நீங்கள் உருவாக்காமல் அவர்களது துரோகச் செயலை நாங்கள் தடுத்து நிறுத்த முடியாது.

காணி அதிகாரம் கிடைக்கின்ற பட்சத்தில் வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய காணி சுவீகரிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்த முடியும் என்ற கருத்தை சிலர் முன்வைக்கின்றனர்.

பிரதம நீதியரசர் சர்வானந்தா இருந்தபோது காணி அதிகாரம் சம்பந்தமாக 1987 ஆம் ஆண்டு வழக்கொன்று உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது 9 நீதிபதிகள் அந்த வழக்கில் ஒற்றையாட்சியிலே மாகாணத்திற்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது மிகத் தெளிவான ஒரு தீர்ப்பை வழங்கியது. அத்தனை அதிகாரங்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநரது கையில்தான் இருக்குமே தவிர மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சருடைய கையிலோ அல்லது அமைச்சர்களது கையிலோ ஏன் மாகாண சபையின் கையிலோ கிடையாது. மாகாண பட்டியல் இருக்கின்ற அத்தனை அதிகாரங்களையும் பயன்படுத்துவதாக இருந்தாலும் கூட மத்திய அரசினுடைய தெளிவான உத்தியோகபூர்வமான அனுமதி இல்லாமல் அந்த விடயங்கள் சம்பந்தமாக அவர்கள் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது என தீர்ப்பை வழங்கினார்கள்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இருந்தபோது உச்ச நீதிமன்றத்தில் மாகாண காணி அதிகாரம் சம்பந்தமாக வழக்கு உச்ச நீதிமன்றம் சென்ற போது ஒற்றையாட்சிக்குள் எந்த அதிகாரமும் மாகாணத்துக்கு கிடையாது அனைத்துமே மத்தியின் கையிலேதான் இருக்கிறது என்றும் மத்தி விரும்பினால் மாத்திரமே மாகாணத்துக்கான விட்டுக் கொடுப்பதாக இருக்கும் என கூறப்பட்டது.

உச்ச நீதிமன்றம் மாகாணத்திற்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகு 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த கூறுவது ஒரு அயோக்கியத்தனம்.

நீங்கள் தயவு செய்து எதிர்வரும் 30 ஆம் திகதி நாங்கள் நடத்துகின்ற விழிப்புணர்வு போராட்டத்தில் கலந்து கொள்வதோடு உங்களுக்கு தெரிந்த அனைத்து மக்களுக்கும் இந்த உண்மைகளை சொல்ல வேண்டும்.18 வயதுக்குக் குறைவாக இருந்தாலும் வாக்களிக்காதவர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு இது பற்றி விழிப்புணர்வை ஊட்டவேண்டும் வீட்டுக்குள் முடங்கி இருக்கக்கூடிய முதியோர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தமிழனுக்கும் இந்த ஆபத்து தெரியப்படுத்தப்பட வேண்டும். இந்த போராட்டத்தில் முழு வீச்சில் பங்களிப்பு செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.