வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்று (24) வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கவனயீர்ப்பில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவிக்கையில், நாங்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றோம்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த மற்றும் விசேட தேவையுடையவர்களை கொண்ட குடும்பத்தில் இருந்து தான் நாங்கள் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றோம்.
இந்நிலையில் கடந்த 21.01.2022 அன்று அமைச்சினால் கல்வி வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் 60 தொண்டர் ஆசிரியர்கள் வடக்கு மாகாணத்தில் உள்ளார்கள் என்றும் அவர்களது நியமனம் தொடர்பாக ஆராயுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் வடக்கு மாகாணத்தில் 210 தொண்டர் ஆசிரியர்கள் உள்ளோம். 60 தொண்டர் ஆசிரியர்கள் என குறித்த கடிதத்தில் எவ்வாறு வந்துள்ளது என எமது வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தினை வினவிய போது அவர்கள் தமக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர்.
நாங்கள் இது தொடர்பாக அமைச்சினை வினவியபோது, வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கம் அனுப்பிய பெயர் விவரங்களின் அடிப்படையிலேயே தாங்கள் குறித்த கடிதத்தை அனுப்பியதாக தெரிவிக்கின்றனர்.
மிகுதி 110 பேருடைய பெயர்களும் அந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என நாங்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
எனவே, உரிய அதிகாரிகள் எமது நிலையை கருத்தில் கொண்டு எமக்கான நியமனத்திற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் – என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.