மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு- வீடியோ பதிவு செய்தவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

168 0

மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யாவை, மதம் மாறும்படி கூறி வற்புறுத்தியதாலும், தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாலும் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக லாவண்யா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
அவரது மரணத்திற்கு நீதி கேட்டு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை பதிவிட்டனர். தொடர்ந்து மதம் மாறும்படி வற்புறுத்தியதால் லாவண்யா தற்கொலை செய்ததாக  அவரது சித்தி சரண்யா குற்றம்சாட்டினார்.
லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி லாவய்ணா பேசியதை வீடியோ பதிவு செய்த முத்துவேல் நாளை காலை 10 மணிக்கு வல்லம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும், வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனை ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நாளை அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
மேலும், அந்த வீடியோவில் பதிவானது மாணவியின் குரல் தானா என்பதை உறுதி செய்து வரும் 27-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.