ராசிபுரம் அருகே எருதுவிடும் நிகழ்ச்சிக்காக பொதுமக்கள் திரண்டனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்து சில நாட்கள் வரை ஜல்லிக்கட்டு, எருதாட்டம், கோவிலை சுற்றி எருதுவிடும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் அனுமதிபெறவேண்டும், கொரோனா சான்றிதழ் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
எனினும் கட்டுப்பாடுகளை மீறி சில இடங்களில் எருதாட்டம், எருது விடும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கரியாம்பட்டி பகுதியில் இன்று இளைஞர்கள் எருதுவிடும் நிகழ்ச்சி நடத்துவதற்காக திரண்டனர்.
இதையொட்டி அந்த பகுதியை சுற்றியுள்ள சிலர் மாடுகளை இன்று அதிகாலையில் கோவிலை சுற்றி அழைத்து வந்தனர். முதலாவதாக ஊர் கோவில் மாடு கோவிலை சுற்றி வந்தது.
இதுபற்றி அறிந்த ஆயில்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எருதுவிடும் நிகழ்ச்சி நடைபெறாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.