எமது மக்கள் தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையிலான உரித்தினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம்-சுமந்திரன்

313 0

16129377_1585374974823790_2092551446_oதமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் எமது மக்களை தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையிலான உரிமையினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.

பல்வேறு ஏக்கத்தின் மத்தியிலும் இந்த வருடமும் தீர்வுத்திட்டம் தவறிப் போய்விடுமா என்ற கவலையுடனேயே இந்த தைப்பொங்கலை தமிழர்கள் கொண்டாடினர். சென்றவருடம் பொங்கலைக் கொண்டாடிய போது நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு வருடமாகின்றது. இந்த 2016இல் ஒருதீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அந்த பொங்கலை கொண்டாடினோம்.

பல எதிர்பார்ப்புகளுடன் கடந்த ஆண்டு அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டது. அது உருவாக்கப்பட்டபோது இரண்டு மாதகால தடங்களும் இருந்தது. இரண்டு தடவைகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படமுடியாமல்,மார்ச்மாதம் 09ஆம் திகதி நிறைவேற்றப்பட்டபோது அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சரித்திர நிகழ்வு நடைபெற்றது.

நல்லாட்சி என்ற அடிப்படையில் இரண்டு முக்கிய கட்சிகள் இந்த நாட்டில் புதிய அத்திபாரத்தையிட வேண்டும் என்பதற்காக சரித்திரத்தில் இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.

இந்த நிலையில் குறித்த பிரேரணை நிறைவேற்றப்படாத நிலையில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. நாங்களும் அச்சமடைந்தோம்.ஆனால் இறுதியில் அந்த தீர்மானம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனடிப்படையில் அரசியலமைப்பு கூடி தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றியது. அதன்கீழ் உபகுழுக்களின் அறிக்கைகள் ஓகஸ்ட்மாதம் வெளிவந்தது.

நடக்குமா நடக்காதா என்ற கருத்துகளும் நடக்காத என்ற விமர்சனங்களும் கூறிக்கொண்டிருந்த நிலையில் ஒவ்வொரு உப குழுக்களிலும் அனைத்துகட்சி பிரதிநிதிகள் இருக்கத்தக்கதாக வெளிவந்த நிலையில் மக்கள் மத்தியில் சிறு நம்பிகை துளிர்விட்டது.

முக்கியமான இடைக்கால அறிக்கையொன்று வரவிருந்தது. அது டிசம்பர் 10வரை பிற்போடப்பட்டது. மீண்டும் 10ஆம் திகதியும் பிற்போடப்பட்டது.

இந்த வருடமும் தீர்வுத்திட்டம் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சிய நிலையில் அது காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே நாங்கள் தைப் பொங்கலைக் கொண்டாடிவருகின்றோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமா? தமிழ் பேசும் மக்களுடைய அபிலாசைகளை முழுமையாக பூர்த்திசெய்யக்கூடிய வகையில் எங்களது பகுதியை நாங்களே ஆளக்கூடிய வகையில் ஆட்சிமுறையைக்கொண்ட புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று உருவாகுவதற்கான கேள்வி இன்று எழுந்துள்ளது.

தீர்வுத்திட்டத்தை நாங்கள் இலகுவாகப்பெற்றுக்கொள்ளமுடியும் என நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. அதன் காரணமாகவே மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் எழுந்தன.

ஆனால் அதனை நடாத்தி முடிக்கின்ற பொறுப்பு தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்தேயாக வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.

ஒரு தீர்வுக்காக உயிர்களைக்கொடுத்து போராடியுள்ளோம்.போராளிகளை மட்டுமன்றி மக்களின் உயிர்களையும் இதற்காக கொடுத்துள்ளோம். அவ்வாறான தியாகங்களை செய்த எங்களினால் தீர்வினைப் பெற முடியாமல் போகுமா என்ற ஆதங்கம் பலரிடம் உள்ளது.

இந்த ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்திய காலம் தொடக்கம். தமிழ் மக்களை அழித்தொழித்துவிடுவார்கள், தமிழர்களுக்கு நியாயமானதை தரமாட்டார்கள் என்ற காரணத்தினால் கடந்த ஆட்சிக்காலத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம்.

அதற்காகவே அவர்கள் அகற்றப்பட்டனர். இந்த நாட்டில் இருந்த சிறுபான்மை மக்களின் வாக்கு பலத்தினால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். நம்பிக்கையுடன் தமிழ் மக்கள் வாக்களித்தனர். அதே நம்பிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தொடர்ச்சியாக பாரம் கொடுத்தனர். அதன் மூலமாகவே இந்த நிலைக்கு வந்துள்ளோம்.

மற்றைய நாடுகளில் இல்லாத ஒன்றை நாங்கள் கேட்கவில்லை.உலகில் உள்ள எந்த தனி தேசத்திற்கும் எந்த தனி மக்களுக்கும் உரித்துடையதை பெற்றுக் கொடுக்கவேண்டிய கடப்பாடு உலகத்திற்கு உண்டு என்ற உணர்வுடன் உலக நாடுகள் எங்கள் பின்னால் வந்தது.

அதுவரைக்கும் பல்வேறு காரணங்களுக்காக எங்களது போராட்டங்களை அனுபவித்திருக்காத நாடுகளும் கூட எங்களுக்கு பின்னால் அணி திரண்டுள்ளன.

தமிழ் மக்களின் சக்தியுடன் தமிழ் மக்களின் ஜனநாயக சக்தியுடன் உலக நாடுகளின் தார்மீக ஆதரவுடன்தான் இந்தளவுக்கு நாங்கள் வந்துள்ளோம்.

தற்போது ஏற்பட்டுள்ள தடங்கலையும் தாண்டி பயணிப்பதற்கு சர்வதேச சக்தியே எங்களுக்கு முக்கியமாக நிற்கின்றது. இதில் இருந்து அரசாங்கம் தவறமுடியாது. இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களும் மறுதலிக்க முடியாது என்கின்ற நிலைப்பாட்டில் இன்று உலகம் இருக்கின்றது.

தடங்கல் வரும் என்று எதிர்பார்த்தோம்.அதனை எதிர்கொள்வதற்கு தயாராகவே உள்ளோம். அதனைவிட்டு ஓடுவதற்கு யாரும் நினைக்கவில்லை. இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் தடங்கல்களை மீறி தற்போதுள்ள மக்கள் சக்தியோடும்

உலக ஆதரவோடும் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் எமது மக்களை தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையிலான உரித்தினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம். அதனை இந்த பொங்கலில் நாங்கள் எடுக்கும் திடசங்கற்பமாகும். என மேலும் தெரிவித்தார்.