வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையாய் உள்ளுக்குள் குமுறிக் கொண்டுதான் இருக்கிறது இலங்கை. பொத்தாம்பொதுவாக ‘இலங்கை’ என்று குறிப்பிடுவதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. தமிழர்கள் மட்டுமில்லைஇ சிங்கள மக்களும் அங்கே நிம்மதியாய் இல்லை. போரில் தோற்றதாகச் சொல்லப்பட்டவர்களை விட வெற்றிபெற்றதாக அறிவித்துக் கொண்டவர்கள்தான் அதிக பதற்றத்தில் இருக்கின்றனர்.
ஒருபுறம் 2009 இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட – சீரழிக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நீதிபெற்றே தீர்வது என்கிற தமிழினத்தின் ஓர்மம் மேலும் மேலும் கூர்மையடைந்துகொண்டே போகிறது. இன்னொரு புறம் சிங்களச் சிப்பாய்களும் ராணுவ அதிகாரிகளும் கூண்டிலேற்றப்பட்டு விடுவார்களோ என்கிற சிங்கள இனத்தின் அச்சம் அதிகரித்தபடியே இருக்கிறது. இதனால்இ தமிழர்கள் மட்டுமின்றி இலங்கையில் சிங்களவரும் நிம்மதியாய் இருக்க முடியவில்லை!
உலகின் மூலை முடுக்கெங்கும் சிதறிக் கிடக்கிற ஈழத் தமிழினம் தனது தர்ம ஆவேசத்தாலும் அறிவார்ந்த அணுகுமுறைகளாலும் இலங்கை அரசு செய்த திட்டமிட்ட தமிழின அழிப்பை உலக அரங்கில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. இனப்படுகொலை நடந்து ஏழாண்டுகள் ஆன பின்னாலும் புலம்பெயர் தமிழ் உறவுகளின் ஓர்மமும் நம்பிக்கையும் ஒருசிறிதும் குறைந்துவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் நீதிக்கான அவர்களது குரல் மேலும் மேலும் வலுப்பெற்று வருகிறது.
கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகப் புலம்பெயர் தமிழர்களின் உலகளாவிய போராட்டங்களைக் கண்டு அஞ்சி நடுங்கியபடியேதான் இருக்கிறது இலங்கை. இப்போது தமிழர் தாயகமும் ஒருங்கிணைந்து போராடத் தொடங்கியிருப்பதைப் பார்த்து அஞ்சிச் சாகிறது.
சென்ற செப்டம்பர் மாதம் – ‘சர்வதேச விசாரணைப் பொறிமுறையின் மூலம் தமிழினப் படுகொலைக்கு நீதி வழங்கு’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியின் மாபெரும் வெற்றி சிங்கள ஆட்சியாளர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கையையும் உலுக்கியது.
யாழ் பேரணி தொடர்பான செய்திகளில் ஒரு வியக்கத்தக்க முரணைப் பார்க்க முடிந்தது. அந்தப் பேரணியின் வெற்றியைக் குறைத்துக் காட்ட நமது ‘நண்பர்கள்’ சிலர் முயற்சித்தபோது அது ஒரு மிகப்பெரிய வெற்றி என்பதை உலகுக்கு எடுத்துச் சொன்னவர்கள் சிங்கள அறிவு ஜீவிகள்தான்!
‘இவ்வளவுக்குப் பிறகும் தமிழர்கள் சோர்ந்து விடவில்லை – என்பதையே யாழ் பேரணி காட்டுகிறது. இது சிங்களப் பேரினவாதத்துக்கும் நீதி வழங்கக் கூட மறுக்கும் நமது ஆணவத்துக்கும் அடங்காப்பிடாரித்தனத்துக்கும் விடப்பட்டிருக்கும் சவால். இதற்குப் பிறகும் 2009ல் நடந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்க மறுத்தால் இலங்கையின் வாயிலில் கிழக்கு திமோர் வந்து நிற்பதைத் தவிர்க்க முடியாது’ என்று பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தார்கள் சிங்கள அறிவுஜீவிகள்.
தாயகத்தில் நசுக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு நீதி பெறாமல் புலம்பெயர் நாடுகளில் வாழ்கிற ஈழத் தமிழர்கள் ஓய்ந்துவிட மாட்டார்கள் – என்று சொந்த இனமான சிங்கள இனத்தை எச்சரிக்கவும் அந்த அறிவுஜீவிகள் தவறவில்லை. 2009 முதல் ஐரோப்பிய நாடுகளிலும் பிரிட்டனிலும் கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் தாங்கள் நடத்தி வருகிற போராட்டங்களின் வீச்சைத் தமிழர் தாயகத்தின் மூச்சாக்குவதில் புலம்பெயர் தமிழர்கள் வெற்றி பெற்றிருப்பதையே யாழ் பேரணி உணர்த்துகிறது – என்பது அவர்களது வாதம். அதுதான் உண்மையும் கூட!
இனப்படுகொலைக்கு எதிராக 2009ம் ஆண்டிலிருந்தே புலம்பெயர் தமிழர்கள் முழுமூச்சோடு போராடி வருகின்றனர். தமிழீழத்தில் அது எதிரொலித்துவிடக் கூடாது என்பதில் சர்வ ஜாக்கிரதையாக இருக்கிறது இலங்கை. அதனாலேயே வட மாகாணத்தில் மட்டும் 2 லட்சம் படையினரை நிறுத்திவைத்திருக்கிறது. தனது ராணுவப் பிரிவுகளில் (ARMY DIVISIONS) 75 சதவிகிதத்தை வடகிழக்கில் நிறுத்தியிருக்கிறது. ஐந்து பேருக்கு ஒரு சிப்பாய் துப்பாக்கியோடு நின்று கொண்டிருக்கிறான்.
இப்படியொரு பதற்றமான சூழ்நிலைக்கு இடையில்தான் யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடந்தது. ராணுவத்தின் முற்றுகையையும் சில தமிழர் கட்சிகளின் முட்டுக்கட்டையையும் மீறி அந்தப் பேரணியில் தாமாக முன்வந்து கலந்துகொண்டனர் தமிழ் மக்கள். மிகக் கடுமையான அழிவுகளைச் சந்தித்த அந்த மக்களின் அச்சத்தைத் தகர்த்ததுதான் யாழ் ‘எழுக தமிழ்’ பேரணியின் மிகப் பெரிய சாதனை.
அதே ‘எழுக தமிழ்’ பேரணி கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு நகரில் இந்த வாரம் (ஜனவரி 21 சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது. யாழ் பல்கலைக் கழக மாணவச் செல்வங்கள் கஜன் – சுலக்சனின் படுகொலைக்கு நீதிகேட்டு வீதிக்கு வந்து ஆவேசத்துடன் போராடிய கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு இளைஞர்கள் அந்தப் பேரணியில் கலந்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். யாழ் எழுக தமிழ் பேரணியின் வெற்றியை உறுதிசெய்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் மட்டக்களப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதாக எனக்கு வந்திருக்கிற ஒரு மின்னஞ்சல் தெரிவிக்கிறது.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது யாழ் எழுகதமிழ் போன்றே ‘மட்டக்களப்பு – எழுக தமிழ்’ பேரணியும் பெருவெற்றி அடையும் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. இந்தப் பேரணிக்குப் பிறகாவது தமிழர்களின் உண்மையான மனநிலையைப் புரிந்துகொள்ள இலங்கை முன்வரவேண்டும்.
யாழ் பேரணிக்கு முன்பே ‘எழுக தமிழ்’ பேரணி நடத்தவேண்டிய அவசியம் குறித்து முதல்வர் விக்னேஸ்வரனும் தமிழ் மக்கள் பேரவையின் மற்ற தலைவர்களும் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தனர்.
சர்வதேச விசாரணைப் பொறிமுறை மூலம் தமிழினப் படுகொலைக்கு நீதி வழங்கு – என்பது பிரதான முழக்கமாக இருந்தாலும் மற்ற கோரிக்கைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையே! சிங்களக் குடியேற்றம் மற்றும் திடீர் பௌத்த விகாரைகள் என்று சிங்கள மயமாக்கல் தொடர்வதை எழுக தமிழ் பேரணி கண்டித்தது. தமிழர் தாயகத்திலிருந்து ராணுவத்தை வெளியேற்று…. தாயக மக்களை அவர்களது சொந்தக் காணிகளில் குடியமர்த்து….. என்பது அந்தப் பேரணி முன்வைத்த இன்னொரு முக்கியக் கோரிக்கை.
தமிழர் தாயகமான வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட வேண்டும்…. சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி முறையே தமிழர் விரும்பும் அரசியல் தீர்வு – என்பது யாழ் எழுக தமிழ் முன்வைத்த தீர்வுத் திட்டம். காணாது போனோர் விவகாரம் அரசியல் கைதிகள் விடுதலை பயங்கரவாதத் தடைச்சட்டம் ஆகிய பிரச்சினைகளிலும் எழுகதமிழ் பேரணி திட்டவட்டமான கோரிக்கைகளை முன்வைத்தது. யாழ் பேரணி எதையெல்லாம் முன்மொழிந்ததோ அதையெல்லாம் கூடுதல் அழுத்தத்துடன் வழிமொழிய இருக்கிறது மட்டக்களப்புப் பேரணி.
‘நடந்தது நடந்துவிட்டது… அதையே கிளறிக்கொண்டிருக்கக் கூடாது…. அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும்….’ என்று நசுக்கப்பட்டிருக்கும் எமது இனத்துக்குப் புத்திமதி சொல்கிறவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் போதி சத்துவரில் பாதி சத்துவர்கள். வேறெதை அவர்கள் கிளறச் சொல்கிறார்கள் என்பது குறித்து இதுவரை நமக்குத் தகவலில்லை.
‘எது முடிந்துபோன கதை? ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று இரண்டு என்று பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய் தந்தையர் முடிந்துபோன கதையென்று இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? அந்த உயிரிழப்புகளுக்குப் பரிகாரமே கிடையாதா? தம் அன்புக்குரியோரைப் பறிகொடுத்தவர்கள் நீதியையும் நியாயத்தையும் வேண்டி நிற்பதில் பிழை என்ன’ என்று சென்ற ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில் முதல்வர் விக்னேஸ்வரன் அறச்சீற்றத்துடன் கேட்டார். அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.
இந்தக் கேள்வியைத் தவிர்க்க முடியாத இலங்கை ‘என்னை நானே விசாரித்துக் கொள்வேன்’ என்று இன்றுவரை அடம்பிடிக்கிறது. அது அசட்டுத்தனமான வாதமில்லை அயோக்கியத்தனமான வாதம்.
இலங்கை நீதிமன்றங்களின் மூலம் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பேயில்லை – என்பதற்கு எவ்வளவோ சான்றுகள் இருக்கின்றன. குமாரபுரம் படுகொலைகளில் குற்றஞ்சாட்டப்பட்ட பாதுகாப்புப் படையினர் ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்பட்டதிலிருந்து ரவிராஜ் படுகொலையில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது வரை அநீதியான தீர்ப்புகள் ஏராளம்.
‘சொந்த வழக்குக்கு யாரும் நீதிபதியாக இருக்க முடியாது’ என்கிற கோட்பாட்டுக்கு நேர்மாறாக போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் தன்னுடைய ராணுவ அதிகாரிகளை இலங்கை அரசு தானே விசாரித்துக் கொள்ள முடியுமா – என்று விக்னேஸ்வரன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே முடியவில்லை இலங்கையால்!
இலங்கை அரசின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அதன் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன பகிரங்கமாக அறிவித்தது எரிகிற நெய்யில் எண்ணெய் வார்ப்பதாக இருந்ததை எவரும் மறந்துவிட முடியாது. ‘இழைத்த குற்றங்களுக்காக ராணுவம் விசாரிக்கப்பட வேண்டும்…… ஆனால் அவர்களைத் தண்டிக்க இடம் கொடுத்துவிடக் கூடாது. இதுதான் அரசின் நிலை’ என்கிற அரிய கொள்கையை அம்பலப்படுத்தியவர் ராஜித.
ராஜித சொன்னதைத்தான் அதிபர் மைத்திரியும் சொன்னார். ‘மின்சார நாற்காலி போர்க்குற்ற விசாரணைக்கான தீர்ப்பாயம் – என்கிற வார்த்தைகளை அகராதியிலிருந்தே நீக்கிவிட்டோம்’ என்றார். மைத்திரியின் இந்த வார்த்தைகள் சட்டத்தை மதிக்காத காட்டுமிராண்டிகளின் ஆட்சிதான் இலங்கையில் இப்போதும் நடக்கிறது என்பதற்குச் சான்று! மின்சார நாற்காலியையெல்லாம் நீக்கிவிடுவதற்கு கொழும்பில் இசை நாற்காலிப் போட்டியா நடந்து கொண்டிருக்கிறது?
மைத்திரிபாலா சிறிசேனா மகிந்த ராஜபக்சவின் முகமூடி. ராஜபக்சவைக் காப்பாற்றுவதுதான் அவரது முழுநேர வேலையாக இருக்கிறது. அவருக்காக வேண்டுமானால் நாம் ஒரு சௌகரியத்தைச் செய்து தரலாம். ஒரே ஒரு மின்சார நாற்காலியைப் போட்டுவிட்டு மகிந்தனையும் மைத்திரியையும் அதைச் சுற்றி ஓடவிடலாம். இசை நிறுத்தப்பட்டதும் இருவரில் ஒருவர் அதில் உட்கார்ந்தாக வேண்டும். தனது காட்பாதர் மகிந்தனைக் காப்பாற்றுவதற்காக மைத்திரி வேண்டுமானால் அதில் போய் உட்கார்ந்து கொள்ளட்டும்! மைத்திரி தயாரா?
போர்க்குற்றவாளிகளையும் இனப்படுகொலையாளிகளையும் மட்டுமின்றி அவர்களைக் காப்பாற்ற முயல்வோரையும் நடுத்தெருவில் நிறுத்தி அம்பலப்படுத்துவதற்கான இன்னொரு வாய்ப்பை மட்டக்களப்புப் பேரணி எமது இனத்துக்கு வழங்கியிருக்கிறது.
குற்றவாளி எவனும் தானே போய் மின்சார நாற்காலியில் உட்கார்ந்து விடுவதில்லை. அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டுபோய் அதில் வலுக்கட்டாயமாக உட்காரவைப்பது பாதிக்கப்பட்ட மக்கள் சமூகம்தான்! இதை மைத்திரிபாலாவுக்கு உணர்த்துகிற அளவுக்கு மட்டக்களப்புப் பேரணி இருக்க வேண்டும். மக்கள் வெள்ளத்தால் மட்டு நகர் நிரம்பி வழிய வேண்டும். அதன் மூலம் சிங்களப் பேரினவாதத்தின் அகந்தையும் ஆணவமும் அடியோடு அழிய வேண்டும்.
சென்ற வாரம் மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்ட யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒருவர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பான ஒரு தகவலைக் குறிப்பிட்டிருந்தார். அவர் கணக்கின்படி வடக்கில் தமிழரின் எண்ணிக்கை 10 லட்சம் சிங்களர் எண்ணிக்கை 35 ஆயிரம். கிழக்கில் தமிழர் 6 லட்சம் சிங்களர் 3.5 லட்சம். திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் கிழக்கு மாகாணத்தில்தான் அதிகம் – என்பதே இதற்குக் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார் அந்தத் தம்பி.
‘தமிழர் தாய்மண் மிக அதிகமாக அபகரிக்கப்பட்ட கிழக்கு மண்ணில்தான் தமிழினத்துக்கு நீதிகேட்கும் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்….. அந்தக் கடமையை நிறைவேற்ற யாழ்ப்பாணத்தில் திரண்டதைப் போல் இருமடங்கு மாணவர்கள் மட்டக்களப்புப் பேரணியில் திரளுவோம்….’ என்று அந்தத் தம்பி குறிப்பிட்டிருந்தார்.
தமிழகத்திலிருந்து அந்தத் தம்பிக்கு நம் சார்பாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தங்கள் தாய்நாட்டை மீண்டும் பிடிக்கப் போராடிய மாவீரர்கள் உலவிய மட்டக்களப்பில் திரளுகிற தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மாடு பிடிக்கும் உரிமைக்காகப் போராடுகிற இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூட கூடுதலாக இருக்க வேண்டும். மாடு பிடிப்பதற்கான உரிமையைக் காட்டிலும் நாடு பிடிப்பதற்கான உரிமை உன்னதமானது தம்பி! இதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
என்னுடைய ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்துக்காக மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய பாடலொன்றில்
‘மட்டு நகர்ப் பாட்டும் மத்தாளம் கூத்தும் மனசு மறக்கலையே’
என்கிற வரிகளை ஒருபோதும் என்னால் மறக்க முடிவதில்லை. மட்டு நகரின் ஒட்டுமொத்த மத்தளங்களும் சேர்ந்து எழுப்புகிற பேரொலியாக ஒலிக்க இருக்கிற மாணவச் செல்வங்களின் குரல் தமிழினத்தால் மறக்கவே இயலாத அளவுக்கு ஓங்கி ஒலிக்க வேண்டும்.
ஜனவரி 21ல் மட்டக்களப்பில் ஒலிக்கப் போகிற உங்கள் குரலில் ஆரவார வார்த்தைகள் எதுவும் இடம்பெறப் போவதில்லை. அது இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் குரல்! இலங்கைக்குள்ளும் தமிழ்நாட்டிலும் மட்டுமில்லை…. ஜெனிவா வரை அது எதிரொலிக்கும்.
சிங்கள இலங்கை என்கிற நச்செலி இந்த முறையும் ஜெனிவாவில் தப்பித்துவிடக்கூடாது. அதற்குக் கிடுக்கிப் பிடி போடுவதாக மட்டக்களப்புப் பேரணி அமையட்டும்…. உங்களைப் போன்ற மாணவர்களின் பங்கெடுப்பு உலகின் மௌனத்தைக் கலைக்கட்டும்! வாழ்த்துக்கள் தம்பி!