ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவமனை உபகரணங்கள் கையளிப்பு!

189 0

நாட்டினது சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜப்பான் அரசாங்கமானது 400 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவமனை உபகரணங்களை நாடளாவிய ரீதியிலுள்ள ஒன்பது வைத்தியசாலைகளுக்கு வழங்கியுள்ளது.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தினால் இந்த உபகரணங்கள் கையளிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரினால் இந்த உபகரணத் தொகுதியானது உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளிக்கப்பட்டது.

தெல்தெனிய, வரகாபொல, வெலிகந்த, பிம்புர, கரவனெல்ல, அவிசாவளை, நாவலப்பிட்டி மற்றும் ஹிங்குராங்கொட ஆதார வைத்தியசாலைகளுக்கு தேவையான உபகரணங்களும், ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் உள்ள பிசிஆர் ஆய்வு கூடத்திற்கு தேவையான உபகரணங்களும் ஜப்பானினால் வழங்கப்பட்டுள்ளன.
ஜப்பான் அரசாங்கத்திற்கும், ஜப்பான் மக்களுக்கும் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்காக இலங்கை நன்றி தெரிவிப்பதாக சுகாதார அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது ஜப்பான் இலங்கையின் 70 வருட நட்புறவுக்கு மதிப்பளிப்பதாகவும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரமைப்பின் உதவியுடன் சுகாதாரத் துறையில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிந்துள்ளதாகவும் ஜப்பானிய தூதுவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.