முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு உட்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

187 0

தருமபுரி: முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் தருமபுரி வீடு உட்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று (20-ம் தேதி) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கெரகோட அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி.அன்பழகன். இவர் தருமபுரி மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளராகவும், பாலக்கோடு தொகுதியின் எம்எல்ஏவாகவும் உள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் இவர் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கெரகோட அள்ளியில் உள்ள கே.பி.அன்பழகனின் வீடு, அருகிலுள்ள பூலாப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அவரது மகள் வித்யா ரவிசங்கர் வீடு, பெரியாம்பட்டி மற்றும் பொன்னேரி பகுதிகளில் இயங்கும் அமைச்சருக்குச் சொந்தமான கிரஷர் குவாரி, கெரகோட அள்ளியைச் சேர்ந்த, அமைச்சரின் உறவினர் கே.டி.கோவிந்தன், முன்னாள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் சந்திரசேகர், தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி மற்றும் அவரது சகோதரர் வீடு ஆகிய இடங்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று (20-ம் தேதி) காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தருமபுரி அடுத்த அன்னசாகரத்தில் உள்ள தருமபுரி நகர அதிமுக செயலாளர் பூக்கடை ரவியின் வீடு, கே.பி.அன்பழகனின் உதவியாளரான தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகில் வசிக்கும் பொன்னுவேல் வீடு, பென்னாகாரம் அடுத்த தாளப்பள்ளத்தில் உள்ள தருமபுரி ஆவின் ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன் மற்றும் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், ஆந்திர மாநிலத்திலும் உள்ள, முன்னாள் அமைச்சருக்கு தொடர்புடைய சில இடங்கள் உட்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று (20-ம் தேதி) காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அவரது கெரகோட அள்ளி வீட்டில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த சோதனை சம்பவம் தருமபுரி மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.