டாஸ்மாக் மதுக்கூடங்கள் ஏலத்தின் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.12 கோடி வருவாய் கிடைக்கிறது: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்

205 0

டாஸ்மாக் மதுக்கூடங்கள் ஏலத்தின் மூலமாக அரசுக்கு மாதந்தோறும் கூடுதலாக ரூ.12 கோடி வருவாய் கிடைக்கிறது என தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

தமிழக சமூக நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவி திட்டம் மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று பயனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் தங்க காசுகளை வழங்கினார். அதேபோல, புதிய மற்றும் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

ஆர்.எஸ்.புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு, அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் ரூ.21.65 கோடி மதிப்பில் திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கும் தங்கம் வழங்கும் திட்டத்தில் இன்று (நேற்று) 2,800 மகளிர் பயன் பெற்றுள்ளனர். நகராட்சிகள், பேரூராட்சிகளில் 39 இடங்களில் ரூ.24 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகத்துக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 8,905 மின்மாற்றிகள் புதியதாக அமைக்க வேண்டும் என கண்டறியப்பட்டது. இதற்காக முதல்வர் ரூ.625 கோடி நிதியை ஒதுக்கியதை தொடர்ந்து, 8 ஆயிரம் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவையும் அடுத்த 30 நாட்களுக்குள் அமைக்கப்பட்டுவிடும்.

கடந்த ஆட்சியில், டாஸ்மாக் மதுக்கூடம் ஏலம் மூலம் மாதத்துக்கு ரூ.16 கோடி தான் வருவாய் வந்தது. தற்போது மாதத்துக்கு கூடுதலாக ரூ.12 கோடி என மொத்தம் ரூ.28 கோடி வருகிறது. முன்பு ஏலத்தில் 6,400 பேர் மட்டுமே பங்கேற்ற நிலையில், தற்போது 13 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.