5 நாட்கள் தடைக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதி – திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

200 0

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் 5 நாட்கள் தடைக்கு பிறகு நேற்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் கரோனா தொற்றின்மூன்றாவது அலை வேகமாக பரவிவருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட பண்டிகை நாட்களை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 18-ம் தேதி வரை தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் பொங்கல் மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.

இருப்பினும், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் தொடர்ந்து திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் இருந்தனர். கோயிலில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் கோயிலுக்குச் செல்லும் நுழைவுவாயிலில் நின்றபடியும், கடற்கரையில் தூரத்தில் நின்றபடியும் கோபுரத்தை நோக்கி வழிபட்டுவிட்டு திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் 5 நாட்கள் தடைக்கு பிறகு நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஏற்கெனவே பல்வேறுபகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனர். நேற்று அதிகாலை 5 மணி முதல் இவர்கள் கடலில் புனித நீராடி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

இதனால், கோயில் கடற்கரை பகுதி மற்றும் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்தனர். ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு களைச் செய்திருந்தனர்.