சென்னை மாநகராட்சி தேர்தல்: மேயர் பதவியை கைப்பற்ற தி.மு.க. பெண்களிடையே கடும் போட்டி

224 0

சென்னை மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மாநகராட்சிகளில் மிக மிக பழமையான மாநகராட்சி என்ற சிறப்பை பெற்றது சென்னை மாநகராட்சி.

1668-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த மாநகராட்சி அந்த காலகட்டத்தில் 10 மைல் சுற்றளவு கொண்டிருந்தது.

புனித ஜார்ஜ் கோட்டை பகுதி மட்டும் நகராட்சி ஆகவும் சுற்றி இருந்தவை கிராமங்களாகவும் இந்த மாநகராட்சிகள் அமைந்துள்ளன. சுதந்திரத்திற்கு பிறகு சென்னை மாநகராட்சி எல்லை நாளுக்குநாள் விரிவடைந்தது.

சென்னை மாநகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ.2 ஆயிரம் கோடி என்ற அளவில் உள்ளது. தற்போது இந்த மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. 174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டிருந்தது. தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியாக மாற்றம் பெற்ற பிறகு 426 சதுர கிலோ மீட்டராக பரப்பளவு உயர்ந்துள்ளது.

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியில் சுமார் 48 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் விரைவில் 200 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய உள்ளனர். அவர்கள் மூலம் மேயர், துணை மேயர் மற்றும் நிலை குழுக்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். புகழ்பெற்ற சென்னை மாநகராட்சியில் இதுவரை எத்தனையோ பேர் மேயர்களாக இருந்துள்ளனர். ஆனால் பட்டியலின பெண்கள் யாரும் இந்த பதவியை இதுவரை அலங்கரித்ததில்லை.

அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது சென்னை மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 84 வார்டுகளில் பொதுப்பிரிவு பெண்கள் போட்டியிடலாம். 16 வார்டுகளில் பட்டியலினத்தை சேர்ந்த பொதுப் பிரிவினர் போட்டியிடலாம். 16 வார்டுகளில் பட்டியலின பெண்கள் மட்டும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சி மேயர் பதவியும் பட்டியலின பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி வரலாற்றில் பட்டியலின பெண் ஒருவர் மேயர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

சென்னை மாநகராட்சி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதால் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் முக்கிய கட்சிகளில் உள்ள பட்டியலின பெண்கள் இடையே கடும் ஆர்வம் தோன்றியுள்ளது. தங்கள் தொகுதி வார்டுகளில் போட்டியிட்டு மேயர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்று இப்போதே போட்டியில் இறங்கிவிட்டனர்.

200 வார்டுகளில் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 32 வார்டுகளில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அளிக்க வாய்ப்பு உள்ளது.

சென்னை மாநகராட்சி வரலாற்றில் 1933-ம் ஆண்டு முதல் மேயர் பதவி இருந்து வருகிறது. தேர்வு செய்யப்படுபவர் ஓராண்டு மட்டுமே மேயர் பதவி வகிக்க முடிந்தது. அதன்பின் 1996-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக பதவிக்காலம் உயர்த்தப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் மாநகராட்சியில் 1971-ம் ஆண்டு முதல் 1972-ம் ஆண்டு வரை காமாட்சி ஜெயராமன் என்ற பெண் மட்டுமே ஓராண்டு மேயராக இருந்தார்.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால் முதல்முறையாக பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை மாநகராட்சி மேயராக பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகராட்சியில் தேனாம்பேட்டை மண்டலத்தில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் எஸ்.சி.பி. பிரிவு பெண்களுக்கு 2 வார்டுகள், பொது பிரிவு பெண்களுக்கு 11 வார்டுகள் என 13 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேபோல், அண்ணா நகர் மண்டலத்தில் உள்ள 15 வார்டில் 9 வார்டுகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மணலி மண்டலத் தில் உள்ள 7 வார்டுகளில் பொது பிரிவு பெண்களுக்கு 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளில் 2 எஸ்.சி., பிரிவு பெண்களுக்கும், 8 வார்டுகள் பொதுப்பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதர மண்டலங்களில் சராசரி அளவில் ஒதுக்கீடு உள்ளது.

தி.மு.க.வில் மேயர், துணை மேயர் பதவிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் யாரை தேர்வு செய்வார் என்ற எதிர் பார்ப்பு நிலவுகிறது. இதில் புழல் ஒன்றிய செயலாளர் வக்கீல் நாராயணனின் மனைவி கவிதா நாராயணன் பெயர் அடிபடுகிறது. இவர் ஏற்கனவே கவுன்சிலராக பதவி வகித்தவர். இந்த முறையும் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டுள்ளார்.

இதேபோல் துணை மேயர் பதவிக்கு சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு பெயர் அடிபடுகிறது. இவர் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு பாடுபட்டவர். சிற்றரசு மாவட்ட பொறுப்பாளராக இருந்தும் எம்.எல். ஏ. தேர்தலில் போட்டியிடாமல் சேப்பாக்கத்தில் உதயநிதியின் வெற்றிக்காக பாடுபட்டவர். எனவே சிற்றரசுவுக்கு இந்த முறை உதயநிதி சிபாரிசு செய்து துணை மேயர் பதவியை வாங்கிக்கொடுப்பார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.