எமது பகுதிகளில், எமது மக்கள் ஆளக்கூடிய சமஷ்டி முறையான தீர்வுதான் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும், அதுவே எமது மக்களின் அபிலாஷைகளாகும். அதனை ஓரங்கட்டிவிட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் தெரிவித்ததாவது,
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் தேசிய பிரச்சினை தொடர்பாக எதனையும் கூறாது விடுபட்டுள்ளது. அதுமட்டுமல்ல வடக்கு, கிழக்கு பிரதிநிதிகள் தமது கொள்கைகளை ஓரமாக வைத்துவிட்டு தமது செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
எமது கொள்கைகள் என்பது எமது மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பாதாகும். சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் எமது மக்கள் தமிழ் கட்சிகளுக்கு ஓர் ஆணையை வழங்கி வந்துள்ளனர்.
தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு, அதுவும் சமஷ்டி முறைமையில் அந்த தீர்வு அமைய வேண்டும் எனவும் மிகத் தெளிவாக கூறிவந்துள்ளனர். அதனை ஓரங்கட்ட முடியாது.
13 ஆம் திருத்தத்தை இல்லாது செய்ய பல சதிகள் இடம்பெற்று வருகின்றன. ஆகவே தான் இந்தியாவின் ஆதரவை கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
13 ஆம் திருத்தம் எமக்கு இறுதித் தீர்வு அல்ல, ஆனால் சமஷ்டி தீர்வு கிடைக்கும் வரையில் 13 ஆம் திருத்தம் நடைமுறையில் இருக்க வேண்டும் என இந்தியாவை வலியுறுத்திக்கொண்டுள்ளோம். இது இந்த நாட்டிற்கு எதிரான செயற்பாடு அல்ல, 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவிற்கும் கடமை உள்ளது.
வடக்கு, கிழக்குக்கு அபிவிருத்தி தேவையான ஒன்றாகும், நிலைபேறான அபிவிருத்தியின் மூலமே நாட்டினை கட்டியெழுப்ப முடியும். ஆனால் நியாமான தீர்வு இல்லாத காரணத்தினால் தான் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது போயுள்ளது.
ஆகவே தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட்டால் தான் நாட்டில் நியாயமான அபிவிருத்தியையும் காண முடியும். பண்டா -செல்வா ஒப்பந்தம் தொடக்கம் இந்த நாட்டில் பல போராட்டங்களுக்கு நாம் முகங்கொடுத்துள்ளோம்.
அதில் பல்லாயிரக்கணக்கான மக்களை இழந்துள்ளோம். ஆகவே எமது கொள்கையை காப்பாற்ற இவ்வளவு தியாகங்களை செய்துவிட்டு இன்று ஓரங்கட்டுவது நடக்க முடியாத விடயமாகும்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததே தவிர சமாதனம் ஏற்படவில்லை. யுத்த முடிவு சமாதானம் அல்ல. யுத்தம் ஏற்பட ஏதுவான காரணிகள் இன்னமும் அவ்வாறே உள்ளது. ஆகவே அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
வெறுமனே அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்வதன் மூலமாக மக்களுக்கு பிரயோசனமாக அமையப்போவதில்லை. ஆகவே தான் எமது பகுதிகளில் எமது மக்கள் ஆளக்கூடிய சமஷ்டி முறையான தீர்வுதான் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும்.
இந்த நாட்டில் உள்ள அரசியல் அமைப்பில் உள்ள ஒரு சரத்தை அமுல்படுத்துவதற்கு ஓர் அரசாங்கம் தயங்குவதை இந்த நாட்டில் தான் அவதானிக்க முடியும். இப்போதுள்ள மாகாண சபையில் அதிகார பகிர்வு இல்லை என்றார்.