சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகக் குறிகாட்டியைப் பொறுத்தமட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஊழல் கட்டுப்பாடு ஆகியவற்றில் இலங்கை 5 புள்ளிகளைப் பெற்றிருப்பதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இக்குறிகாட்டியில் இலங்கை ஐம்பதை விடவும் குறைவான நிலையிலிருப்பது நாட்டின் கடன் நிலைவரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, இம்மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவடையும் பிணைமுறிகளுக்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை 19 ஆம் திகதி புதன்கிழமை செலுத்தியிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் இயங்கும் மூன்று முக்கிய கடன் தரப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ‘ஃபிட்ச் ரேட்டிங்’ தரப்படுத்தல் முகவர் நிறுவனம் இலங்கையை ‘சிசிசி’ நிலையிலிருந்து ‘சிசி’ நிலைக்குத் தரமிறக்குவதாகக் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அறிவித்தது.
நாட்டின் கையிருப்பில் மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று இருப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, வெளியகக் கடன்களை மீளச்செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல், எதிர்பார்க்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளடங்கலாகப் பல்வேறு காரணங்களால் இலங்கையை ‘சிசி’ நிலைக்குத் தரமிறக்குவதாக ஃபிட்ச் ரேட்டிங் விளக்கமளித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனமானது இலங்கை தொடர்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புடன் மேலும் சில காரணிகளை இணைத்து, திருத்தப்பட்ட புதிய அறிவிப்பை நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெளியிட்டிருக்கின்றது.
அதேவேளை சர்வதேச பிணைமுறிகளுக்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவை நேற்றைய தினத்திற்குள் (18 ஆம் திகதி) செலுத்தவேண்டியிருந்த நிலையில், அக்கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அதுமாத்திரமன்றி அப்பதிவில் ஆளுநர் இலங்கையைத் தரமிறக்கம் செய்திருக்கக்கூடிய மூன்று முக்கிய சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்களான ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம், மூடியின் முதலீட்டாளர் சேவை மற்றும் ஸ்டான்டர்ட் அன்ட் புவர்ஸ் ஆகிய நிறுவனங்களின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்குகளையும் இணைத்திருக்கின்றார்.
எனினும் வெளிநாட்டுக்கையிருப்பின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நாடு பாரிய டொலர் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், மருந்துப்பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப்பொருட்களைக்கூட இறக்குமதி செய்யமுடியாத நிலையேற்பட்டுள்ளது.
எனவே மத்திய வங்கியினால் கடந்த 2021 டிசம்பரில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் பிரகாரம் கையிருப்பில் உள்ள 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை அத்தியாவசியப்பொருட்களின் இறக்குமதிக்காகப் பயன்படுத்துமாறும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்துவதற்கு அதனைப் பயன்படுத்தவேண்டாம் என்றும் பொருளாதார வல்லுனர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.