ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா 3-வது அலை எப்போது உச்சத்தை தொடும்? எப்போது சரியத் தொடங்கும்? என்ற விவரங்களை கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் கொரோனா 3-வது அலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 3 லட்சம் தினசரி பாதிப்பை எட்டியுள்ளது.
இதற்கிடையே டெல்லி, மும்பை நகரங்களில் கொரோனா தாக்கம் சற்று குறையத் தொடங்கி இருக்கிறது. இந்த நகரங்களில் கொரோனா உச்சத்தை தொட்டுவிட்டு குறைந்து வருவதாக சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் கொரோனா முதல் அலை மற்றும் கொரோனா 2-வது அலையின் தாக்கத்தை சரியாக கணித்துக்கூறிய கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் மணீந்திர அகர்வால் 3-வது அலை தொடர்பாகவும் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா 3-வது அலை எப்போது உச்சத்தை தொடும்? எப்போது சரியத் தொடங்கும்? என்ற விவரங்களை அவர் தனது ஆய்வில் கூறி இருக்கிறார். இந்த ஆய்வு விவரங்கள் நேற்று வெளியானது.
அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய 3 நகரங்களிலும் கொரோனா 3-வது அலை ஏற்கனவே உச்சத்தை தொட்டுவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மும்பையில் கடந்த 12-ந் தேதி கொரோனா 3-வது அலை உச்சத்தை தொட்டதாக கூறி உள்ளார்.
அதுபோல கொல்கத்தாவில் கடந்த 13-ந் தேதியும், டெல்லியில் கடந்த 16-ந் தேதியும் கொரோனா 3-வது அலை உச்சத்துக்கு வந்ததாக அவரது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் கடந்த 17-ந் தேதி கொரோனா 3-வது அலை உச்சத்துக்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது.
குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று (புதன்கிழமை) கொரோனா 3-வது அலை உச்சத்தை எட்டுவதாக மணீந்திர அகர்வால் கூறி உள்ளார்.
அரியானா மாநிலத்தில் நாளையும் (20-ந்தேதி), பெங்களூருவில் வருகிற 22-ந்தேதியும், கர்நாடகா மாநிலத்தில் அதற்கு அடுத்த நாள் 23-ந்தேதியும் கொரோனா 3-வது அலை உச்சத்துக்கு வரும் என்று அவர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற 25-ந் தேதி கொரோனா 3-வது அலை உச்சத்தை எட்டும். அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கும் என்று பேராசிரியர் மணீந்திர அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தில் வருகிற 26-ந் தேதியும், ஆந்திராவில் 30-ந் தேதியும் கொரோனா 3-வது அலை உச்சத்துக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியரின் இந்த கணிப்புகள் சூத்ரா என்ற அமைப்பு மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் வருகிற 23-ந் தேதி கொரோனா 3-வது அலை உச்சத்துக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுவரை தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த கொரோனா அலைகளில் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 4 லட்சத்து 16 ஆயிரத்தை கடந்தது. இந்த முறை ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் மிக மிக அதிகமாக இருப்பதால் தினசரி பாதிப்பு 10 லட்சத்தை எட்டலாம் என்று தகவல்கள் வெளியானது. சோதனைகள் அடிப்படையில் பார்த்தால், தினசரி பாதிப்பு பல லட்சத்தை தாண்டும் என்று கூறப்பட்டது.
ஆனால் ஐ.ஐ.டி. பேராசிரியர் மணீந்திர அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா 3-வது அலையில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடக்க வாய்ப்பு இல்லை என்று கூறி உள்ளார். வருகிற 23-ந்தேதிக்கு பிறகு கொரோனா 3-வது அலை பாதிப்புகள் குறையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த தகவல்களை மத்திய அரசின் மூத்த நிபுணர்கள் உறுதி செய்ய மறுத்துள்ளனர். டெல்லி, மும்பையில் கொரோனா 3-வது அலை உச்சத்தை எட்டியதா என்பதை இப்போதே சொல்ல முடியாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்.) விஞ்ஞானி டாக்டர் சமீரன் பாண்டே கூறி உள்ளார்.