ஆபத்து சூழலைத் தவிர்க்க பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் என தொற்று நோய் பிரிவு தலைவர் பஹீம் யூனுஸ் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இந்த பாதிப்பில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளாத நிலை காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தற்போது ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் வெகுவாகப் பரவி வருவதால் பல நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் பிரிவு தலைவர் பஹீம் யூனுஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனாவுடன் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு கொரோனாவுக்கு எதிரான பாதுகாவலை கைவிட வேண்டும் என அர்த்தம் இல்லை.
நல்ல தரமுள்ள முக கவசங்களை நாம் கட்டாயம் அணிய வேண்டும். நாம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். ஆபத்து சூழலைத் தவிர்க்க பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியால் 90 சதவீத இறப்பைத் தடுக்க முடியும்.
இசை கச்சேரிக்கோ அல்லது மதுபான விடுதிக்கோ செல்வது இன்றியமையாத ஒன்றல்ல. ஆனால் நம்முடைய பெற்றோரை கவனிப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
முழு அளவிலான தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் கொரோனாவுடன் நாம் வாழ முடியும். அவை மரணம் ஏற்படாமல் தடுக்கும். மருத்துவமனையில் சிகிச்சை பெறாமலும் தடுக்கும் என தெரிவித்துள்ளார்.