13ம் திருத்தத்தை அரசியற் தீர்வாக காட்டும் முயற்சிக்கு எமது எதிர்பினைக் காட்டுவோம்!
யேர்மன் ஈஈழத்தமிழர் மக்கள் அவை
ஈழத்தமிழ் மக்களின் அரசியற் தீர்வாக பதின்மூன்றாம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச் சதியை எதிர்த்து தாயகத்தில் நடைபெறும் மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்மாறு புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் தமிழ் அமைப்புகளையும், மக்களையும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை உரிமையுடன் கோருகிறது.
இலங்கையின் ஒற்றையாட்சி முறையிலான அரசியலமைப்புச் சட்டமானது இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் இருப்பதை மறுதலிக்கிறது. இவ் அரசியல் யாப்பானது சிங்கள மொழியையும் பௌத்த மதத்தையும் முதன்மைப்படுத்தியதனூடாக, சிங்கள பௌத்த பேரினவாதிகளின் நிலைப்பாட்டை சட்டரீதியாக நிலைநிறுத்தியுள்ளது. இதன் பாதக விளைவுகளையே கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்றனர.
பல் தேசிய இனங்கள் வாழும் ஒருநாட்டில் தனித்து எண்ணிக்கையில் அதிகமாக உள்ள மக்களின் நலனை மட்டுமே காக்கும் இவ்வரசியலமைப்பானது மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் இலங்கைத் தீவில் தமிழ்த் தேசியத்தின் இருப்பை சிதைக்கும் நோக்கிலான கொள்கையை முன்னெடுப்பதற்கு வழி வகுத்துள்ளது.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இவ் அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தமானது அதன் தோற்றத்தில் அதிகாரத்தை மாகாண மட்டத்தில் பகிர்ந்தளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இருப்பினும் ஒற்றையாட்சியை பாதுகாப்பது என்பதன் அடிப்படையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுனரிடமே அதிகாரம் கையளிக்கப் பட்டுள்ளது. ஈழத் தமிழர் தேசத்தின் ஒருங்கிணைப்பை சிதைக்கும் மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தை நிரந்தரமாகப் பிரிப்பதோடு அர்த்தமுள்ள சுயாட்சி முறையை முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கம் கொண்டது.
இத்திருத்தச்சட்டமூலத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் சிறிலங்காவில் உள்ள உள்ளுராட்சிச்சபைகளுக்கு சற்று அதிகமான அதிகாரங்களைக் கொண்டிருந்தபோதிலும் அவற்றின் நிறைவேற்று அதிகாரங்கொண்டவராக ஜனாதிபதியால் நியமிக்கப்படும் அரச ஊழியரான ஆளுனரே இருந்து வருகிறார். மாகாணசபை முறைமையில் இதுவரை நிறைவேற்றபடாத காணி, காவற்துறை அதிகாரங்கள்கூட நடைமுறையில் எதுவித தீர்வினையும் பெற்றுதரவல்ல வகையிலான அதிகாரங்களைக் கொண்டி ருக்கவில்லை. இச்சபைகள் மத்திய அரசாங்கத்தை மீறி எதுவும் செய்ய முடியாதநிலையினை சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்நிலையில் மாகாணசபை முறைமையை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கான தொடக்கப் புள்ளியாகக் கூடக் கருத முடியாதுள்ளது.
தமிழ்த் தேசியக்கூட்டமைபின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ.விக்னேஸ்வரன் , ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் , தமிழ்மக்கள் கட்சித் தலைவர் ந.சிறீகாந்தா ஆகியோர் கூட்டாக ஒப்பிமிட்டு இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்திலிருந்து அவர்கள் பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்தை அரசியற் தீர்வின் ஆரம்பப்புள்ளியாக ஏற்றுக்கொண்டுள்ளமை தெரிகிறது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் முகமாக தமிழ் மக்களிடம் ஆணை பெற்று, தேர்தல்காலத்தில் சமஸ்டி அடிப்படையில் தீர்வினைப் பெற்றுத்தருவதாக மக்களுக்கு உறுதியளித்த தமிழத்தலைவர்கள் தற்போது தமது சுயலாபத்திற்காக தமது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசியல் யாப்புத் தொடர்பான கள யதார்த்தம் இவ்வாறிருக்க, இந்தியா உள்ளிட்ட சர்வதேசத் தரப்புகளிடம் தமிழ் மக்களின் அரசியல் வேணவாவைத் தீர்க்கவல்ல தீர்வினைத் பெற்றுத்தர உதவுமாறு கோரிக்கையை முன்வைக்க வேணடியது அவசியமானது.
அதற்குப் பதிலாக எதுவித அதிகாரமுமற்ற 13 ஆம் திருத்தத்தை உடனடித் தீர்வாக இந்தியாவிடம் கோருவது எமது கொள்கை சார் அரசியலுக்கு மட்டுமல்ல, நடைமுறை அரசியலுக்கும் முரணானது என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
எமது மக்களுக்கு எதிரான பேரினவாத ஒடுக்குமுறை இனவழிப்பாக உருவெடுத்த போது சிங்கள மற்றும் தமிழ்த் தேசிய இனங்கள் மத்தியில் முரண்பாடு முற்றி விரிசல் உண்டானபோது, ஒற்றையாட்சி முறையின் கீழ் ஐக்கியமாக வாழ முடியாது என்ற நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்ட போது, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் வகையில் தமிழர்கள் பிரிந்து செல்லும் கட்டாய சூழலுக்குத் தள்ளப்பட்டோம்.
தமிழ் மக்கள் கடந்த ஏழு தசாப்தங்களாகத் தொடர்ச்சியாக மாறி மாறி ஆட்சியமைத்த சிங்கள அரசுகளால் மனிதாபிமானமற்ற மகாபாதக அடக்குமுறைகளுக்கு உள்ளாகி யுள்ளனர். ஆகவே, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அங்கீகரித்து இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தும் அர்த்தமுள்ள தீர்வை சர்வதேச சமூகம் வழங்க முடியாவிட்டால், தமிழ்த் தேசம் தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
ஏற்கனவே 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு சுதந்திரமான இறையாண்மை கொண்ட மதச்சார்பற்ற அரசை உருவாக்குவதற்கான அமோகமான மக்களாணை சனநாயக ரீதியாக முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது என்பதை இத் தருணத்தில் நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
எதிர்வரும் 30 ம் திகதி தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பில் 13 ஐ கோரும் கூட்டுச் சதியை எதிர்க்கும் முகமாக நடைபெறும் மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு புலத்திலும் நிலத்திலும் எமது முழுமையான ஆதரவை வழங்க அனைவரையும் அன்புரிமையுடன் கோரிநிற்கின்றோம்.
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.