பிரித்தானியா பிரிந்து செல்லும் முடிவின் பின்புலத்தில் யார்? – கோகிலவாணி

763 0

Great Britain and EU, Brexit referendum conceptமாற்றம் என்பதே என்றும் மாறாதது. இது இயற்கையின் நியதி. மாற்றத்திற்குட்படாதது என்று எதுவும் இதுவரையில் இப்பிரபஞ்சத்தில் இருந்ததில்லை இனியும் இருக்கப் போவதில்லை. தொன்று தொட்டு இன்று வரை எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்திருந்த இப் பூமியில் கடந்த வாரம் ஏற்பட்ட மாற்றமாக ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலக வேண்டுமென 52 வீதமான மக்கள் தீர்ப்பளித்ததமை முக்கியத்துவம் பெறுகின்றது. 2016 ஜூன் 23ம் திகதி வரை ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடுகள் 28ஆக இருந்த நிலையில் தற்போது அதிலிருந்து விலகிக் கொள்ளும் முடிவினை பிரித்தானியா எடுத்திருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் பிரித்தானியா மட்டுமல்ல உலகமே ஒருவித பரபரப்புடன் காத்திருந்தது என்றால் அது மிகையல்ல.

பிரித்தானியா, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது அல்லது விலகாமல் இருப்பது என்பது அந்த நாட்டு மக்களது முடிவு. இந்தக் கட்டுரையின் நோக்கம் அந்த நாட்டு மக்களின் முடிவினை ஆய்வு செய்வதல்ல. ஐரோப்பிய ஏகபோக வல்லரசுகளின் ஆதிக்கம் எம் போன்ற மூன்றாமுலக நாடுகளின் ஒவ்வொரு மனிதனையும் பாதித்திருக்கிறது. இந்த வகையில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லும் நோக்கில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பினால் ஏற்பட்ட சமூகப் பொருளாதாரத் தாக்கங்கள் எம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

அந்தவகையில் பெரும்பாலான ஊடகங்களில் இவ்விடயம் முக்கிய இடத்தினைப் பெற்றிருந்தது போலவே தமிழ் ஊடகங்களில் அமைந்திருந்தது. சுமார் 300,000 இற்கும் மேலான எண்ணிக்கையில் பிரித்தானியாவில் தமிழர்கள் வாழ்ந்து வரும் சூழலில் அவர்கள் சார்பில் பேச வல்ல சிலர் மேற்படி விடயம் தொடர்பில் கருத்துக்களை வழங்கியிருந்தனர். அவர்களுள் பெரும்பாலானோர் பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என்ற கருத்தை ஆதரித்துப் பேசியிருந்தனர். அதற்காக அவர்கள் வழங்கிய காரணங்கள், இன்று வரை அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களா இத்தகைய கருத்துக்களை முன்வைக்கின்றார்கள் என எல்லோரையும் எண்ண வைத்திருந்தன.

பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்ல வாக்களித்தமைக்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம்.

  •  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகள் மீதான வெறுப்பு
  •  சிக்கன நடவடிக்கை என்ற தலையங்கத்தில் சமூக நல உதவித் திட்டங்களை பிரித்தானிய அரசு குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமை.
  • வறிய, உழைக்கும் மக்களின் அரசிற்கு எதிரான எதிர்ப்பு வாக்குகள்.

இவ்வாறான பல்வேறு காரணங்களுக்கும் மத்தியில் எமக்கெல்லாம் துருத்திக்கொண்டு தெரிந்தது வெளி நாட்டுக் குடியேறிகள் தொடர்பான பிரச்சனையே. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லவேண்டும் என்ற பிரிவைத் தலைமை தாங்கிய கட்சிகள் அனைத்தும் நிறவாதக் கட்சிகளாகவும், வெளி நாட்டுக் குடியேறிகளுக்கு எதிரான கட்சிகளாகவும் காணப்பட்டன. இக் கட்சிகளே பிரிந்து செல்வதற்கான பிரச்சாரத்தைத் தலைமை தாங்கின. போலந்து, ரூமேனியா போன்ற வறிய ஐரோப்பிய நாடுகளிலிருந்து வேலை தேடிவரும் அப்பாவிக் குடியேற்றவாசிகளால் தமது நாட்டின் வளங்களும், வேலைவாய்ப்புக்களும் அழிந்து போகின்றன என இக்கட்சிகள் கூச்சலிட்டன. தவிர, பிரித்தானிய மக்களுக்கு வழங்கப்படும் உதவித் திட்டங்களை இவர்கள் அபகரித்துச் செல்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. தவிர துருக்கி போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொண்டால் தமது கலாச்சாரம் சிதைந்துவிடும் என்று வேறு பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டன.

நிறம், மதம், கலாச்சாரம் என்பவற்றைக் காரணங்களாக முன்வைத்து மக்கள் கூட்டங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒரு வகையான இருண்ட வெளியிலிருந்தே ஆரம்பமாகின்றன. உண்மைகள் மறைக்கப்பட்டு அச்ச உணர்வொன்றை மக்கள் மத்தியில் விதைப்பதன் ஊடாக தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் அதிகாரமட்டம் சார்ந்த ஒரு பிரிவினரே இவற்றின் பின்னணியில் செயற்படுகின்றனர்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்குத் புலம்பெயர் தமிழர்கள் முன்வைத்த காரணங்களில் பிரதானமானதாக இனவாதமும், ஏனைய இனங்கள் மீதான வெறுப்புணர்வுமே அடிப்படையானதாக அமைந்திருந்தது.

போலந்து, ரூமேனியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு வேலை தேடி வருகின்ற குடியேறிகளால் தமது நாளாந்த வாழ்வும், வேலைவாய்பும் ஏன் கலாச்சாரமும் பாதிக்கப்படுகிறது என இனவாதக் கட்சிகளின் போலிப் பிரச்சாரத்தை உள்வாங்கிக்கொண்டு அதனை தமிழ்ச் சமூகத்தின் மீதும் புலம்பெயர் தமிழர்களின் ஆளுமை மிக்க ஒரு பிரிவினர் திணிக்க முயன்றனர்.

சிங்கள பௌத்த பேரினவாத அரசின் ஒடுக்குமுறையால் புலம் பெயர்ந்து சென்ற தமிழர்களும் பிரித்தானியாவில் வெள்ளை மேலாதிக்கவாத மற்றும் நிறவாத ஒடுக்குமுறையின் பாதிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பது வெளிப்படையான உண்மை. ஆக, அவர்களில் எவருமே தம்மைப் போன்றே ஒடுக்கப்படும் கிழக்கு ஐரோப்பிய உழைப்பாளிகளுக்கு எதிரான திட்டமிட்ட பிரச்சாரங்களுக்கு எடுபட்டுப் போகமாட்டார்கள் என்பதை எதிர்பார்த்த சமூக அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் பெருத்த ஏமாற்றமே காத்திருந்தது.

பிரித்தானியாவில் வாழும் தமிழர்களில் பலர் கிழக்கு ஐரோப்பிய அப்பாவித் தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டிருக்கின்றனர் என்பது அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கின்ற போராட வேண்டுமென்ற மனப்பாங்கைக் கொண்ட பலரது இதயங்களையும் இரும்பாலறைந்தது.

நாம் ஒடுக்கப்படும் தேசிய இனம் என்றும் பரந்த மனப்பான்மை கொண்ட ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் பிரிவு என்பதையும் உலக மக்களுக்கு அறிவிப்பதற்குப் பதிலாக ஒடுக்குமுறையாளர்களின் பக்கத்தில் சாய்ந்துகொண்டு நிறவாதமும் இனவாதமும் பேசிய அவமானத்தை புலம்பெயர் தமிழர்களில் ஒரு பிரிவினர் தமதாக்கிக் கொண்டுள்ளனர்.

“இங்கு வரும் குடியேறிகளால் எமது வசதி வாய்ப்புக்கள் குறைகின்றன. எங்களது பிள்ளைகளுக்கு பாடசாலை வசதிகள் குறைகின்றன. வேலை வாய்ப்புக்கள் குறைவடைகின்றன. எங்களது நிதி வளத்தை சுரண்டிக் கொண்டு போய் அவர்கள் தங்கள் நாடுகளை வளப்படுத்திக் கொள்கின்றார்கள், அவர்கள் பிரித்தானிய நாட்டிற்கு எதுவும் செய்வதில்லை. இவை எல்லாம் பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிப்பதால் தான் நடைபெறுகின்றன. ஆகவே பிரித்தானியா விலக வேண்டுமென்பது மேற்குறித்த பிரிவினரது வாதம்.

இவை போலிப் பிரச்சாரங்கள் என்பதை ஆதரபூர்வமான ஆய்வுகள் வெளிப்படுத்தியிருந்தன. பிரித்தானியாவிற்கு வரும் கிழக்கு ஐரோப்பியக் குடிவரவாளர்களால் அந்த நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என பிட்ச் என்ற கடன் தர நிர்ணைய நிறுவனம் அறிவித்திருந்தது. தவிர, அவர்கள் பிரித்தானிய அரசின் திறை சேரிக்கு வழங்கும் வரிப்பணம் அவர்களுக்கு அரசு செலவு செய்யும் தொகையை விட அதிகமானது எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

உண்மைகளை மறைத்து மக்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதன் ஊடாக தமது ஆதிக்கத்தைத் தக்க வைக்க நினைக்கும் அதிகார வர்க்கத்தின் சிந்தனை வெளிப்பாட்டினை பிரித்தானிய தமிழர்களில் ஒரு பகுதியினர் பற்றிக் கொண்டதென்பது இலங்கையில் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் எமதினத்திற்காகக் குரல் கொடுக்கும் சமூகப் பொறுப்புள்ள சக்திகளின் மத்தியில் ஏமாற்றத்தைத் தோற்றுவித்தது.

தமிழர்கள் அடிப்படையில் இனவாதிகளோ, நிறவாதிகளோ அல்ல என உலகத்திற்குக் கூறவேண்டிய ஒரு குறிப்பான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஐரோப்பி யர்களுக்கு மட்டுமன்றி, சிங்கள பேரினவாத அரசின் தமிழர்கள் குறித்த போலிப் பிரச்சாரத்தால் நச்சூட்டப்ப்ட்டிருக்கும் சாமானியச் சிங்கள மக்களுக்கும் எம்மைப் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இன்று எமது வரலாற்றுக் கடமை. இதனூடாகவே ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் மக்களும் பலமடையவும், பேரினவாதிகளும் ஒடுக்குமுறையாளர்களும் பலவீனமடையவும் வழிகள் திறக்கப்படும்.

தமிழ்ப் பேசும் மக்களின் புலம்பெயர் அங்கங்களான மக்களின் வாழ்வியல் குறித்து நாம் தீர்மானிக்க முடியாது எனினும், அவர்களின் அதிகாரவர்க்கம் சார்ந்த நடவடிக்கைகள் எமது தேசிய இனத்தின் பண்பாகக் கருதப்படலாம் என்ற ஆபத்தை நிராகரிக்க முடியாது. இலங்கையிலுள்ள அனைத்து ஒடுக்கப்படும் மக்களின் வலியையும், உலகம் முழுவதும் எம்மைச் சுற்றியுள்ள ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் மக்களின் துயரங்களையும் நாம் உணர்ந்துகொள்வதும் அதற்கான செயற்பாட்டையும் செல் நெறியையும் வகுத்துக்கொள்வதும் எமது உரிமைக் குரலைச் சர்வதேச மயப்படுத்துவதற்கான ஜனநாயக வெளியை உருவாக்கும்.

கோகிலவாணி