எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திருச்சியில் ஈழத் தமிழ் மக்களால் கொண்டாப்பட்டது!

299 0

photoதமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெரும் பலமாகத் திகழ்ந்தவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் திருச்சி வாழ் ஈழத் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

100 ஆவது அகவையில்…
பொன்மனச்செம்மல்!

ஈழத் தமிழ் மக்களின் சுதந்திர வாழ்விற்காய்
உண்மையாய்.. உறுதியாய்.. நின்று
உணர்வோடு பலம் சேர்த்த
உத்தமரே உந்தன் புகழ் ஓங்குக!

வாழ்க! வாழ்க! வாழ்க!
வையகம் உள்ள வரை வாழ்க!

ஈழத் தமிழ் மக்கள்.

என்ற வாசகங்கள் அடங்கிய பதாகை வைத்து அய்யப்ப நகர் முருகன் கோயிலுக்கு அருகாமையில் சிறப்பாக தயார் செய்யப்பட்ட இடத்தில் சிவப்பு, மஞ்சள் வர்ண பலூன்களால் அலங்கரித்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.

கே.கே.நகர் பகுதி காவல் ஆய்வாளர் திரு கெனடி அவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றிவைக்க ஈழத் தமிழ் முதியவர் கேக் வெட்டினார். நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சிறுவர்களுக்கு கேக் ஊட்டியதுடன் காவல் கூடியிருந்த மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் காவல் ஆய்வாளர் சிறப்பித்தார்.

இதே போன்று சீனிவாச நகர் பகுதியிலும் பதாகை வைக்கப்பட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. நிகழ்விடத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு சுடரேற்றி மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்யப்பட்டது. கூடியிருந்த சிறுவர்கள் கேக் வெட்டியிருந்தார்கள்.

தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியில் இருந்து கொண்டே தமிழீழ விடுதலைக்கு ஈடு இணையற்ற பங்களிப்பினை நல்கியதுடன், உயிர் பிரியும் கடைசி நொடிவரை ஈழத் தமிழரையும், தமிழீழ விடுதலையையும் உளப்பூர்வமாக நேசித்த புரட்சித் தலைவனுக்கு நன்றியைத் தெரிவிக்கும் முகமாக திருச்சி வாழ் ஈழத் தமிழ் மக்கள் இவ்விழாவினை கொண்டாடியுள்ளார்கள்.

திருச்சியில் இருந்து இரா.மயூதரன்.