தெற்கு சூடானில் உள்நாட்டு போர் வலுக்கிறது

445 0

201607120537026303_South-Sudan-On-Brink-of-Civil-War-as-Juba-Fighting_SECVPFதெற்கு சூடானில் இரு தரப்பு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை கடும் சண்டை ஏற்பட்டது. இதில் 272 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த சண்டை மேலும் தீவிரமடைந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் இருந்து பிரிந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு சூடான் என்ற புதிய நாடு உதயமானது. அதனை தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு முதல் தெற்கு சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

இதற்கிடையே அதிபர் சல்வா கீர் மற்றும் துணை அதிபர் ரியக் மாசர் ஆகிய இருவருக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. இதனால் அவர்களது ஆதரவாளர்களும் 2 கோஷ்டிகளாக பிரிந்து சண்டையிட்டு வருகின்றனர். இரு தரப்புக்கும் தனித்தனியே ராணுவவீரர்களின் ஆதரவும் உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரு தரப்பு ராணுவத்தினருக்கும் இடையே சண்டை மூண்டது. இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் ஒருவரை தாக்கி கொண்டனர். இதில் அப்பாவி பொதுமக்கள் 33 பேர் உள்பட 272 பேர் கொல்லப்பட்டனர். இந்த சண்டை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், துணை அதிபர் ரியக் மாசரின் வீட்டை குறிவைத்து அதிபர் படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் ஐ.நா. அமைப்பில் பணியாற்றி வந்த சீனாவை சேர்ந்த அமைதி காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஐ.நா. ஊழியர்கள் 6 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் உடனடி நடவடிக்கை மூலம் சண்டையை முடிவுக்கு கொண்டுவரும்படி அதிபர் சல்வா கீர் மற்றும் துணை அதிபர் ரியக் மாசரை வலியுறுத்தி உள்ளார்.